ஹெல்மெட் இல்லாமல் டிரைவிங்; மன்னிப்பு கேட்ட கமல்!


ஹெல்மெட் இல்லாமல் டிரைவிங்; மன்னிப்பு கேட்ட கமல்!

உலகநாயகன் கமல் நடிப்பில் பாபநாசம் படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. இது மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்காகும். ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் கெளதமி, சார்லி, கலாபவன் மணி, டெல்லி கணேஷ், பேபி எஸ்தர், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நேற்று (ஜூன் 22ஆம் தேதி) விஜய் பிறந்தநாளில் வெளியானது.

இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டர் கமல், கௌதமி அவர்களது இரு மகள்களாக படத்தில் நடித்துள்ள (பேபி எஸ்தர், நிவேதா தாமஸ்) ஆகியோருடன் டிவிஎஸ்-50 வண்டியில் பயணிப்பது போன்ற வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்த டிசைனை பார்த்த ரசிகர்கள் அனைத்து நற்காரியங்களிலும் முன்னுதாரணமாக இருக்கும் கமல்ஹாசன் போன்ற ஒரு கலைஞர் ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்ற விவாதம் எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த கமல்ஹாசன் கூறியதாவது…

“முதலில் நான் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை மற்றவர் சொல்லி தெரியக்கூடாது. அதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? நானும் உங்களில் ஒருவனே. எனவே, இனி இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.