என்னை தமிழனாக யாரும் பார்ப்பதில்லை – கமல் பரபரப்பு பேச்சு!


என்னை தமிழனாக யாரும் பார்ப்பதில்லை – கமல் பரபரப்பு பேச்சு!

‘தூங்காவனம்’ படத்தின் தெலுங்கு பதிப்பு ‘சீக்கட்டி ராஜ்ஜியம்’ என்ற பெயரில் இன்று வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது…

“நான் இயக்குனராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். இதை பாலசந்தரிடம் தெரிவித்தேன். எப்போது வேண்டுமானாலும் நீ இயக்குனர் ஆகலாம். உன்னுள் ஒரு நடிகன் இருக்கிறான் என என்னை உற்சாகப்படுத்தினார். அவரது விரலை பிடித்துக் கொண்டு இதுவரை நான் வந்துள்ளேன்.

நான் ஒரு சினிமாக்காரன். இந்த பயணம் எனக்கு போரடிக்கவில்லை. எப்போதும் சினிமாவைப் பற்றித்தான் யோசிப்பேன். சினிமாவில் உள்ள எந்த ஒரு துறை நபராக என்னைப் பார்த்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.

நான் கடவுளை நம்புவதில்லை. ஆனால் கடவுளை வணங்குபவர்களை நான் கௌரவிப்பேன். அவர்களின் நம்பிக்கைக்கு என்றும் மதிப்பளிப்பவன் நான்.

சினிமாவில் இத்தனை காலமாக சம்பாதித்துள்ளேன். ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. ரசிகர்களின் கைதட்டலுக்கு ஒரு விலையை நிர்ணயிக்க முடியாது.

நான் பல மொழிகளில் நடிப்பதால் என்னை தமிழனாக யாரும் பார்ப்பதில்லை. என்னை உலகநாயகன் என்கிறார்கள். அதற்கு நான் தகுதியானவனா? எனத் தெரியவில்லை.

சிவாஜிகணேசன், நாகேஷ், என்.டி.ராமராவ், எஸ்.வி.ரங்கராவ் போன்ற பெரிய பெரிய நடிகர்கள் இருக்கும் இந்த சினிமா உலகில் நான் ஒரு சின்ன நடிகன். அவ்வளவுதான்” என்று பேசினார் கமல்ஹாசன்.