முதல்வரை படம் பார்க்க அழைத்த கமல்ஹாசன்!


முதல்வரை படம் பார்க்க அழைத்த கமல்ஹாசன்!

அறிமுக இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கமல் நடித்த ‘தூங்காவனம்’ படம் தீபாவளியன்று ரிலீஸ் ஆனது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான இப்படம் ஆந்திராவிலும் அதே தினத்தில் வெளியானது. தெலுங்கில் ‘சீக்கட்டி ராஜ்யம்’ என்ற பெயரில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து விஜயவாடா சென்ற கமல் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அதன்பின்னர் இச்சந்திப்பு குறித்து நிருபர்களிடம் கமல் கூறியதாவது…

“அமராவதி தலைநகர் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள என்னை அழைத்திருந்தனர். ஆனால் அப்போது கலந்து கொள்ள முடியவில்லை. எனவே தற்போது முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். மேலும்
‘சீக்கட்டி ராஜ்யம்’ படத்தின் சிறப்பு காட்சியை விஜயவாடா மற்றும் ஐதராபாத்தில் திரையிட திட்டமிட்டு உள்ளேன்.

இப்படத்தை பார்க்க முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆகிய இருவரையும் அழைத்துள்ளேன். சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ள நாளில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பங்கு பெறுவார்கள். அவர்களின் வசதிக்காக விஜயவாடா மற்றும் ஐதராபாத்தில் 6 மணி நேர இடைவெளியில் இந்தச் சிறப்பு காட்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளேன்” என்றார்.