‘தயவுசெய்து செய்யுங்கள்….’ அமைச்சரிடம் கோரிக்கை வைத்த கமல்..!


‘தயவுசெய்து செய்யுங்கள்….’ அமைச்சரிடம் கோரிக்கை வைத்த கமல்..!

நேற்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பெப்சி அமைப்பினர், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கலந்து கொண்டார்.

விழாவில் கமல் கூறுகையில்….

”இங்குள்ள மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்க இது சரியான நேரம் இல்லை. ஆனால் பெப்சி அமைப்பினர் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானதுதான்.

இது தேர்தல் நேரம் என்பதால் வைக்கப்பட்டதல்ல. பலநாள் காத்துக் கிடக்கும் கோரிக்கைகள்தான் இவை.

இத்துடன் மற்றொரு கோரிக்கையையும் சேர்த்து வைக்கிறேன். அறிவுசார் சொத்துரிமையான ‘இண்டலக்சுவல் பிராபர்டி ரைட்ஸை ‘ப் பதிவு செய்ய டில்லி வரை நாங்கள் போக வேண்டியிருக்கிறது. இங்கேயும் இண்டலக்சுவல் இருக்கிறார்கள்.

இங்கேயும் இண்டலக்சுவல் பிராபர்டி இருக்கிறது. அதற்கு இங்கேயே தனியாக ஒரு அலுவலகம் இருக்க வேண்டும். இதை என் கோரிக்கையாக அல்ல உரிமைக்குரலாக சொல்கிறேன்.

மேலும் அவர் பேசும்போது விஷால் பற்றி குறிப்பிட்டார். அதில்…

“இது வாழ்த்துவதற்கான மேடை இல்லை என்றாலும் நாங்கள் நாற்பது ஆண்டுகளாகக் குரல் மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் விஷால் குழுவினர் செய்து காட்டினார்கள்.

நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் என்கிற பட்டத்தை விஷாலுக்குக் கொடுத்தால் தவறில்லை. நாங்கள் செய்யவில்லை. அவர் செய்தார்.

எங்கள் சட்டை அழுக்காகி விடுமோ என்று பயந்தோம். ஆனால் சட்டையே இல்லாமல் போய் விடும் என்ற சூழ்நிலை உருவாகிவிடுமோ? என விஷால் செயலில் இறங்கினார். அவருக்கு வாழ்த்துக்கள்.”

இவ்வாறு கமல் பேசினார்.