கமல் ஆதரவுடன் விஷால் அணி வேட்புமனு தாக்கல்!


கமல் ஆதரவுடன் விஷால் அணி வேட்புமனு தாக்கல்!

நடிகர்களின் படங்கள் வெளியாகும் அன்று உள்ள பரபரப்பு தற்போது நடிகர் சங்கத்தில் உருவாகியுள்ளது. அதற்கு காரணம் நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளதே. வருகிற அக்டோபர் 18ஆம் தேதி இதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சரத்குமார் அணியை எதிர்த்து பாண்டவர் அணி என்றழைக்கப்படும் விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமாரும், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஜயகுமாரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதற்கு முன்பு விஜயகுமார், தியாகு, கே.ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதுபோல் நேற்று மறைந்த சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அவரது சிலைக்கும் மாலை அணிவித்தனர்.

இவர்களைத் தொடந்து பாண்டவர் அணியினை சேர்ந்து நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் கருணாஸ், பொன் வண்ணன் ஆகியோரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதனிடையில் பாண்டவர் அணியினருக்கு ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் உறுதியளித்தார். எனவே ரஜினிகாந்துக்கு சொந்தமான சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று பாண்டவர் அணியினர் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பில் கமல் கலந்துகொண்டு பாண்டவர் அணியினரின் தேர்தல் அறிக்கையை வெளியிட இருப்பதாக தெரிய வந்துள்ளது.