உலகநாயகன் கமலுடன் மீண்டும் ‘நாயகன்’ மணிரத்னம்!


உலகநாயகன் கமலுடன் மீண்டும் ‘நாயகன்’ மணிரத்னம்!

தமிழ் சினிமாவை இந்தியளவில் கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமான இருவர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம். இருவருமே தங்கள் படைப்புகளை ஆணித்தரமாக சமரசமின்றி உருவாக்கிவருகின்றனர்.

ஆனால் இவர்கள் இணைந்து பணியாற்றிய ஒரே படம் ‘நாயகன்’ மட்டுமே. 1987ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. அன்று நாயகனாக பேசப்பட்ட கமல் இன்று உலகநாயகனாக உயர்ந்து நிற்கிறார். இன்று 28 வருடங்களை கடந்த பின்பும் அப்படத்தின் உருவாக்கம், திரைக்கதை, வசனங்கள், கமலின் மாறுபட்ட நடிப்பு என அனைத்தும் பாராட்டப்படுகிறது. இன்றும் உலக அளவில் சிறந்த 100 படங்களில் ஒன்றாக ‘நாயகன்’ படம் திகழ்ந்து வருகிறது.

இப்படம் வெளியான பின்னர்தான் கமலின் மூத்த சகோதரர் சாருஹாசனின் மகளான நடிகை சுஹாசினியை மணந்து கொண்டார் மணிரத்னம். குடும்ப உறவினர்கள் ஆன பின்னர் இவர்கள் தொடர்ந்து பணிபுரியவில்லை. உறவில் இணைந்த இவர்கள் திரையில் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் கூறியதாவது… “மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றுவீர்களா? என்று கேட்கிறீர்கள். அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் தற்போது அதற்கான சூழல் உருவாகியுள்ளது. விரைவில் இணைந்து பணியாற்றுவோம்” என்றார்.