சிம்பு, தனுஷை பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்!


சிம்பு, தனுஷை பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்!

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ‘த்ரிஷ்யம்’. மோகன்லால் – மீனா நடித்த இப்படம் மலையாள திரையுலக வரலாற்றில் மாபெரும் வசூலை வாரிக்குவித்தது. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளிலும் ஹிட்டடித்தது. தெலுங்கு ரீமேக்கில் ஸ்ரீப்ரியா இயக்க வெங்கடேஷ் – மீனா நடித்திருந்தனர். கன்னடத்தில் பி.வாசு இயக்க ரவிச்சந்திரன் – நவ்யா நாயர் நடித்திருந்தனர். ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மற்ற மொழிகளில் வேறு இயக்குனர்கள் ரீமேக் படத்தை இயக்கியிருந்தாலும் தமிழில் மட்டும் அதே இயக்குனரே இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதுபோல மற்ற மொழிகளில் அதே பெயரில் இப்படம் வெளியானாலும் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் கெளதமி, சார்லி, கலாபவன் மணி, டெல்லி கணேஷ், பேபி எஸ்தர், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஜூன் 22ஆம் தேதி வெளியானது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு எந்த கட்டும் சொல்லாமல் ‘U’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

வருகிற ஜூலை 17ஆம் தேதி இப்படம் வெளியாகவிருந்தது. அதே நாளில் தனுஷின் ‘மாரி’, சிம்புவின் ‘வாலு’ படங்கள் வெளியாகவுள்ளது. எனவே தற்போது ‘பாபநாசம்’ படத்தை ஜூலை 3ம் தேதி வெளியிட தீர்மானித்துள்ளனர். இன்னும் ஒரு வாரமே உள்ளதால் தயாரிப்புகுழு பரபரப்புடன் பணியாற்றி வருகிறது.