பாண்டிராஜ் படத்தில் விஷாலுடன் இணையும் கருணாஸ்!


பாண்டிராஜ் படத்தில் விஷாலுடன் இணையும் கருணாஸ்!

‘பாண்டிய நாடு’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஷால், சுசீந்திரன் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பாயும் புலி’. இப்படத்தில் காஜல் அகர்வால், சூரி, சமுத்திரக்கனி, ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வேந்தர் மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தல் பணி, மாணவர்களுக்கு இலவச நோட் புத்தகங்கள் வழங்கும் விழா, ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் என பல நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார் விஷால். படுபிஸியாக இருந்தபோதிலும் தற்போது மூன்று படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி-2′, ‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக படங்களை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் ‘பாயும் புலி’ படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஷால். இவருக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ புகழ் கேத்ரின் தெரசா நடிக்கிறார். இவர்களுடன் தற்போது கருணாசும் இணைந்துள்ளார்.