கொம்பன், நண்பேன்டா, சகாப்தம்; முந்தியது யார்?


கொம்பன், நண்பேன்டா, சகாப்தம்; முந்தியது யார்?

தமிழகத்தில் படங்களுக்கும் அவை வெளியாகும் சமயத்தில் ஏற்படும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. இந்த முறை அந்த பரபரப்பு கொம்பனை தொற்றிக் கொண்டது. இந்நிலையில் பிரச்சினைகள் ஓரளவு இறங்கிய சமயத்தில் ஒரு நாள் முன்னதாகவே படத்தை வெளியிட்டார்கள். ஆனால் அன்றைய காலை காட்சிகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டது தாங்கள் அறிந்ததே.

எனவே, ‘கொம்பன்’ படம் மாலை காட்சியில்தான் வெளியானது. இப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பே இதற்கு ஆதரவு அலையாக மாறியிருந்தது. மாலை காட்சியே அரங்கு நிறைந்த காட்சிகளாக இருந்தது. தமிழ்நாடு முழுவதும் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. கார்த்திக்கு இன்னொரு பருத்திவீரன் என்கிறார்கள்.

உதயநிதி-சந்தானம்-நயன்தாரா கூட்டணியின் ‘நண்பேன்டா’ படம் நேற்று வெளியானது. பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ‘இது கதிர்வேலன் காதல்’ போன்ற படங்களின் கலவையே இந்த படம். இயக்குனர் ராஜேஷின் டச் அப்படியே அவரின் உதவியாளர் ஜெகதீஷிடம் இருந்து வருகிறது. சந்தானத்திடம் சரக்கு தீர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  எனவே, அவசர கால நடவடிக்கையாக உதயநிதி ஸ்டாலின் கூட்டணியை மாற்ற வேண்டும் எனத் தெரிகிறது.

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் ‘சகாப்தம்’. முதல் படமே முற்றிலும் கோணல் என்ற கதையாகி விட்டது. படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்கிறது. நடிப்பு, பாடி லாங்குவேஜ் உள்ளிட்ட நிறைய ஐட்டங்கள் ஹீரோவுக்கு தேவைப்படுகிறது. முதல் படம் என்பதால் இவை பெரிய அளவில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆனால் கேப்டனின் மகன் என்பதால் இவையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆகையால், இந்த 3 படங்களின் ரேஸில் முந்தி செல்கிறார் ‘கொம்பன்’. இனிவரும் நாட்களில் இதில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.