20 வயதுக்குட்பட்ட பெண்கள் ஹீரோயினாக நடிக்கக் கூடாது -பிந்துமாதவி


20 வயதுக்குட்பட்ட பெண்கள் ஹீரோயினாக நடிக்கக் கூடாது -பிந்துமாதவி

‘வெப்பம்’ படத்தில் இருநாயகிகளில் ஒருவராக வந்த பிந்துமாதவி, ‘கழுகு’ படத்தின் மூலம் தன் கேரியரை தனி ஹீரோயினாக தொடங்க ஆரம்பித்தார். இருந்தபோதிலும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, படத்திலும் இரண்டு ஹீரோயினில் ஒருவராகவே வந்தார்.

அதன்பின்னர், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தேசிங்கு ராஜா’, ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

இந்நிலையில், தற்போது ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் உடன் நடித்து வருகிறார். புதுமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வரும் இப்படத்தில் நகுலும் நடித்து வருகிறார். வருகிற பிப்ரவரி 20-ந் தேதி இப்படத்தை வெளியிடவிருக்கின்றனர்.

தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த பிந்துமாதவி தான் நடித்து வரும் படங்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில்… “‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற இந்தப்படம் நன்றாக வந்திருக்கிறது. எனக்கு நல்ல அனுபவத்தை இப்படம் கொடுத்தது. அம்மன் கெட்டப்பில் நடிக்கவேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அதுபோல நடிகர் அஜித்துக்கு ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும். சினிமா நடிகர்களில் மிகவும் அழகானவர் அஜித். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.

மேலும்… “20 வயதிற்குட்பட்ட பெண்கள் யாரும் ஹீரோயினாக சினிமாவிற்குள் நுழையக்கூடாது. ஒருவேளை  என்னுடைய உறவினர்களில்,  இந்த வயதுடைய பெண்கள் சினிமாவில் நுழைய விருப்பம் தெரிவித்தால் அவர்களை அழைக்க மாட்டேன். மறுத்து விடுவேன்” என்று கூறினார்.