காதலர்கள் தெளிவு பெற ஒரு படம் ‘மனதில் ஒரு மாற்றம்’


காதலர்கள் தெளிவு பெற ஒரு படம் ‘மனதில் ஒரு மாற்றம்’

ஆணுக்கும்,பெண்ணுக்கும் வாலிப பருவத்தில் ஏற்படுத்துகிற ஒரு வேதியல் மாற்றம்தான் காதல். காதலர்களை பொருத்தவரையிலும் அது ஒரு திருவிழா. ஆனால் பெற்றோர்களால் 100க்கு 90 சதவிகிதம் நிராகரிக்கப்படுகிறது. ஒரு சாரருக்கு சந்தோஷத்தையும், மற்றொரு சாரருக்கு துக்கத்தையும் கொடுப்பதற்கு பெயர் திருவிழாவே அல்ல என்கிறார்கள் ‘மனதில் ஒரு மாற்றம்’ படக்குழுவினர்.

மேலும் அவர்கள் கூறியிருப்பதாவது… “இப்படத்தை பார்க்க ஒரு காதல் ஜோடி வந்தார்கள் என்றால் படம் முடிந்து வெளியே போகும் போது அவர்கள் மனதிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு தெளிவான மன நிலையோடு அவரவர் வீட்டிற்கே செல்வார்கள்.

புகைப் பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது. அதுபோல் காதலில் ஏற்படுகிற கொலைகள், தற்கொலைகள் போன்ற பல தீய செயல்களை தடுக்க வரும் படம்தான் ‘‘மனதில் ஒரு மாற்றம்’’. இப்படம் நிச்சயமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்கின்றனர்.

மேலும் இயக்குனர் ஜனா வெங்கட் கூறியதாவது… “இந்த ‘மனதில் ஒரு மாற்றம்’ திரைப்படம் இளைஞர்களால் மட்டும் இன்றி பெற்றோர்களாலும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த திருவிழாவாக இருக்கும்” என்கிறார்.

இப்படத்தில் மதன் கதாநாயகனாகவும் ஸ்பூர்த்தி கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகின்றனர். இவர்களுடன் ஆதவன், டான்ஸ் மாஸ்டர் ஜானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘வல்லினம்’ படத்திற்காக சென்ற ஆண்டின் சிறந்த படத் தொகுப்பாளராக தேசிய விருது பெற்ற V.J.சாபு ஜோசப் இப்படத்தில் படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்ரீசாஸ்தா இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.