‘வாலு’ சிம்புக்கு கிடைத்தது ‘மாசு’ சூர்யாவுக்கு கிடைக்கவில்லை!


‘வாலு’ சிம்புக்கு கிடைத்தது ‘மாசு’ சூர்யாவுக்கு கிடைக்கவில்லை!

சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’  மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் ‘கான்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் இதற்கு முன்பு சிம்பு நடித்து முடித்த பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ‘இது நம்ம ஆளு’  மற்றும் விஜய் சந்தர் இயக்கிய ‘வாலு’ ஆகிய படங்கள் வெளிவராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

‘வாலு’ படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், நரேன், மந்த்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்க ஷக்தி ஒளிப்பதிவு  செய்துள்ளார்.

இதற்கிடையில் ‘வாலு’ படம் குறித்து பேச பத்திரிகையாளர்களை சந்திக்க இருந்தார் சிம்பு. அப்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கவிருந்தார். ஆனால் தேதி முடிவில்லாமல் தொடர்ந்ததால் சந்திப்பு தள்ளி போடப்பட்டது. எப்பாடுபட்டாவது படத்தை உடனே வெளியிட்டே தீரவேண்டும் என்று முழு முயற்சியில் சிம்பு ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சிம்புவின் முயற்சிக்கு கைகொடுக்கும் விதமாக ‘வாலு’ படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு கொடுத்துள்ளது. இது சிம்புவுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதாம். இதனைத் தொடர்ந்து ‘வாலு’ படத்தை வருகிற ஜூலை 3ஆம் தேதி வெளியிட இருக்கிறார்.

ஆனால் கடந்த மே மாதம் வெளியான சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்திற்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை. இதற்காக படத்தின் பெயரை இரண்டுக்கு மூன்று முறை மாற்றினர். ‘மாசு’ படத்தின் கதை பழிக்குப் பழி வாங்குவதாகவும், வன்முறை காட்சிகள் மற்றும் ஆங்கில வார்த்தை உபயோகம் அதிகம் இருந்ததாலும் வரிவிலக்கு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.