விஜய்யை தொடர்ந்து மீண்டும் கமலுடன் சூப்பர் ஸ்டார்!


விஜய்யை தொடர்ந்து மீண்டும் கமலுடன் சூப்பர் ஸ்டார்!

இந்த 2015ஆம் ஆண்டு திரையுலகில் கமல் ஆண்டாக அமைந்துவிடும் எனத் தோன்றுகிறது. உழைப்பாளர் தின ஸ்பெஷலாக கமலின் ‘உத்தமவில்லன்’ வெளியானது. வருகிற ஜூலை மாதம் ரம்ஜான் ஸ்பெஷலாக த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் ‘பாபநாசம்’ வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து ‘விஸ்வரூபம்-2’ மற்றும் ‘தூங்காவனம்’ படங்கள் வெளியாகவுள்ளது.

இப்படி தொடர்ச்சியாக ஒரே ஆண்டில் ஒரு சீனியர் நடிகரின் படம் வெளியாவதால் திரையுலகினர் ஆச்சரியத்துடன் வரவேற்கின்றனர். இதனால் கமல் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கமல் தற்போது த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத் ஆகியோருடன் ‘தூங்காவனம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து ‘தலைவன் இருக்கிறான்’ என்று தமிழில் தயாராக இருந்த இப்படத்தை இந்தியில் இயக்கவிருக்கிறார் கமல். ‘அமர் ஹெய்ன்’ என்ற இப்படத்தில் சைஃப் அலிகான் ஹீரோவாகவும் கமல் வில்லனாகவும் நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் வந்தன.  தற்போது இவர்களுடன் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் இணையவுள்ளாராம்.

மோகன்லால் கமலுடன் ‘உன்னைபோல் ஒருவன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார். அதுபோல் கடந்த ஆண்டு வெளியான ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.