மணிவண்ணனின் ‘நூறாவது நாள்’ படம் ‘ரீபூட்’ முறையில் உருவாகிறது!


மணிவண்ணனின் ‘நூறாவது நாள்’ படம் ‘ரீபூட்’ முறையில் உருவாகிறது!

எண்பதுகளில் கலக்கிய படம் மணிவண்ணனின் ‘நூறாவது நாள்’.  இப்போது அந்தப் படம் ‘ரீபூட்’ முறையில் மறு அவதாரம் எடுக்கிறது. படத்தை இயக்க இருப்பவர் இயக்குநர் மணிவண்ணனின் மகன் ரகு என்பதை முன்பே தெரிவித்திருந்தோம்.

அது என்ன ரீபூட்? என்று கேட்கிறீர்களா?  பிரபலமாகி வெற்றி பெற்ற ஒரு படத்தை அதேகதையில், வேறு நடிகர்கள் கொண்டு  மாற்றங்களுடன் மீண்டும் எடுக்கப் படுவது  ரீமேக். சீக்வெல்ஸ் எனப்படுவது அதே கதையின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது. (உ தாரணத்திற்கு சிங்கம் 1, 2, 3 பாகங்கள் வருவது போன்று) ரீபூட் என்பது அதே மையக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு கதைப் போக்கு, திரைக்கதை, காட்சிகள், நடிகர்கள், பாத்திரங்கள் எல்லாவற்றையும் காலத்துக்கேற்ப மாற்றி உருவாக்குவது.

தற்போது, ஹாலிவுட்டில் ‘ஹல்க்’, ‘சூப்பர்மேன்’, ‘ஸ்பைடர் மேன்’ ‘டெர்மினேட்டர்’ போன்ற பல படங்கள் ரீபூட் முறையில் உருவாகி வெற்றிபெற்றுள்ளன. இன்றும் அவை தொடர்கின்றன. தமிழில் ரீபூட் முறையில் உருவாகும் முதல்படம் ‘நூறாவது நாள்’ .

படத்தை இயக்கும் ரகு கூறுகையில்… “அப்பா, அம்மாவின் திடீர்  மறைவு என்னை மிகவும் பாதித்தது. எனவே ஒரு வருடம் இங்கிலாந்தில் தங்கியிருந்தேன். மனம் அமைதியடைந்தது. அப்பா இயக்கிய படங்களில் பெரிய வெற்றி பெற்றபடம் ‘நூறாவது நாள்’. பரபரப்பாக பேசப்பட்ட படமும் கூட. இதை ரீபூட் முறையில் எடுக்க முன்பே முயன்றேன். அங்கு சிலரைச் சந்தித்தேன், நண்பர்களுடன் பேசினேன். பலரும் என் முயற்சிக்கு ஊக்கம் தந்தார்கள்.

இங்கே வந்த பிறகு அதைப் பற்றி பல விவாதங்கள் போனது. அதே கதையை வைத்து ஒரு படத்தை மறுபடியும் அப்படியே எடுப்பதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. அந்தக் கதை எல்லாருக்கும் தெரிந்து விட்டதால் எதிர்பார்ப்பு இருக்காது. தெரிந்த விஷயமாக இருப்பதில் என்ன த்ரில் இருக்கப் போகிறது? எனவேதான் இப்படி எடுக்க முடிவு செய்தேன். கதை, காட்சிகள் திரைக்கதை எல்லாவற்றையும் முழுக்க முழுக்க மாற்றி வேறு ஒரு திசையில் விறுவிறுப்புடன்  செல்லும்படி உருவாக்கியிருக்கிறோம்.

திரைக்கதை வேலைகள் முடிந்து விட்டாலும் திரைக்கதையை செதுக்குவது நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. அதில் திருப்தி வரும்வரை படப்பிடிப்புக்கு செல்ல மாட்டோம். நாயகனாக ‘சதுரங்கவேட்டை’ நட்ராஜ் நடிக்கிறார். சிபிராஜ், யுகே செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் இந்த முயற்சிக்கு உதவியிருக்கிறார்கள். பெரிதும் துணையாக இருந்தார்கள். மற்ற விவரங்களை விரைவில் தெரிவிப்போம்”என்றார் ரகு மணிவண்ணன்.