ஒரே நாளில் ரிலீசாகும் விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி! படங்கள்


ஒரே நாளில் ரிலீசாகும் விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி! படங்கள்

வருகிற அக்டோபர் 21ஆம் தேதி நாடெங்கும் விஜயதசமி விழா கொண்டாடப்படவிருக்கிறது. மற்றவர்களை விட சினிமா ரசிகர்களுக்கு அந்த வாரம் முழுவதும் கொண்டாட்டம்தான். அன்றைய தினம் நிறைய படங்கள் வெளியாகவுள்ளதால் இவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இனி என்னென்ன படங்கள் மோதவிருக்கின்றன என்பதை பார்ப்போம்.

விஜய்மில்டன் இயக்கியுள்ள ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் விக்ரமுடன் சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெராப், சார்மி, சம்பூர்னேஷ் பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரித்துள்ள ‘நானும் ரவுடிதான்’ படமும் களத்தில் இறங்கியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்.ஜே. பாலாஜி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவற்றையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினிமுருகன்’ படமும் களம் காணவுள்ளது. இப்படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அதற்குள் தீர்க்கப்பட்டுவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்துள்ளனர். இமான் இசையமைக்க திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரித்துள்ளார். பொன்ராம் இயக்க பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்துடன் ‘டார்லிங் 2’ என்ற படமும் வெளியாகவுள்ளது. இதில் ரமீஷ், கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சதீஷ் சந்திரசேகரன் இயக்கியுள்ள இப்படத்தை க்ரீன் ஸ்டூடியோஸ் ஞானவேல்ராஜா வெளியிடுகிறார்.