மாதம் 1 படம்; உத்தமவில்லனை தொடர்ந்து ‘பாபநாசம்’!


மாதம் 1 படம்; உத்தமவில்லனை தொடர்ந்து ‘பாபநாசம்’!

உலக அளவில் தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள படம் ‘உத்தம வில்லன்’. இன்னும் ஒரு சில தினங்களில் திரையில் களம் காண போகும் இந்த உத்தமவில்லனை தொடர்ந்து தனது அடுத்த படத்தையும் விருந்தளிக்க தயாராகி விட்டார் கமல்ஹாசன்.

மோகன்லால் – மீனா நடித்த ‘த்ரிஷ்யம்’ மலையாள திரையுலக வரலாற்றில் ஒரு பெரிய வெற்றியைக் கண்டது. வெளியான அன்றைய தினமே இப்படத்தின் வீடியோ சிடி விற்பனையில் புதிய சாதனையை படைத்தது. அதுபோல திரையரங்களிலும் பெரும் வசூலை குவித்தது.

தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளிலும் ஹிட்டடித்தது. தெலுங்கு ரீமேக்கில் ஸ்ரீப்ரியா இயக்க வெங்கடேஷ் – மீனா ஜோடியாக நடித்திருந்தனர். கன்னடத்தில் பி.வாசு இயக்க ரவிச்சந்திரன் – நவ்யா நாயர் ஜோடியாக நடித்திருந்தனர். ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் மற்ற மொழிகளில் வேறு இயக்குனர்கள் ரீமேக் படத்தை இயக்கியிருந்தாலும் தமிழில் மட்டும் அதே இயக்குனரே இப்படத்தை இயக்கியிருக்கிறார்.  அதுபோல மற்ற மொழிகளில் அதே பெயரில் இப்படம் வெளியானாலும் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் கெளதமி, சார்லி, கலாபவன் மணி, டெல்லி கணேஷ், பேபி எஸ்தர், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஜூன் மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.