எனக்கு ஒரு ஹிட் கொடுங்க…. இயக்குனரிடம் கேட்ட விஜய்


எனக்கு ஒரு ஹிட் கொடுங்க…. இயக்குனரிடம் கேட்ட விஜய்

ரீமேக் படங்களின் ராஜா என்று இவரை சொல்லலாம். இவரது இயக்கத்தில் வந்த பெரும்பாலான (ஸாரி) அனைத்து படங்களுமே மற்ற மொழிகளின் ரீமேக் படங்களே… அதுவும் அனைத்திலும் (இரண்டை தவிர) இவரது தம்பியே நாயகன்… இப்போ புரிந்திருக்குமே… ஜெயம் ராஜா-ரவி சகோதரர்களைப் பற்றித் தான் சொல்கிறோம்.

தற்போது மோகன் ராஜா என்ற பெயரில் ‘தனி ஒருவன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜெயம் ரவியுடன் முதன்முறையாக நயன்தாரா இணைந்துள்ளார் இவர்களுடன் நாசர், வம்சி கிருஷ்ணன், தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன், சஞ்சனா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் வில்லனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசையமைக்க ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மோகன் ராஜா, கடந்த 2011ஆம் ஆண்டு விஜய் நடித்த வேலாயுதம் படத்தை இயக்கினார். அதன்பின்னர் தற்போதுதான் தனது அடுத்த படத்தை வெளியிட இருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது…

“நான் இயக்கிய படங்கள் அனைத்தும் ரீமேக் படங்கள்தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நான் அதற்காக பிறக்கவில்லை. ஒரு நல்ல சினிமா கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். இப்படத்தை ரீமேக் செய்தால் சரியாக இருக்கும் என்று தோன்றினால் மட்டுமே செய்கிறேன்.

‘தனி ஒருவன்’ படக்கதைக்கு நிறைய விஷயங்கள் தேவைப்பட்டது. படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமியும் கால அவகாசம் கேட்டார். இப்படி நிறைய கால தாமதங்கள் ஏற்பட்டது. தாமதமானாலும் தற்போது படம் நன்றாக வந்துள்ளது.

என் தம்பி ரவி, இதுவரை போலீஸ் கேரக்டரில் நடிக்கவில்லை. மேலும் எனக்கு கதையே கேட்காத ஒரு நாயகன் தேவைப்பட்டார். என் தம்பிதான் அதற்கு சரி. அவனே நாயகன் எனக்கு எல்லாம் எளிதானது. படத்தில் சமூகத்திற்கான ஒரு நல்ல கருத்தை கூறியிருக்கிறேன்.

ஒருமுறை ஒரு விழாவில், முதன்முறையாக விஜய் சாரைப் பார்த்தேன். அதற்குமுன் நான் அவரிடம் பேசியது கூட இல்லை. அப்போது பேசிய விஜய் “எனக்கு ஒரு ஹிட் தர மாட்டீங்களா.. உங்க தம்பிக்கு மட்டும்தான் கொடுப்பீங்களா எனக் கேட்டார். அதன்பின்னர் நாங்கள் இணைந்து செய்த படம்தான் ‘வேலாயுதம்’.” இவ்வாறு கூறினார் ராஜா.

‘வேலாயுதம்’ படத்திற்கு முன்பு ‘குருவி’, ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’, ‘வில்லு’ என தொடர் தோல்வி படங்களை விஜய் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.