அட தலைப்பே ருசிக்குதே…‘மீன் குழம்பும் மண்பானையும்’ !


அட தலைப்பே ருசிக்குதே…‘மீன் குழம்பும் மண்பானையும்’ !

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்திற்கு சொந்தமானது ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’. இந்நிறுவனம் சார்பாக ரஜினியின் ‘மன்னன்’, ‘சந்திரமுகி’, அஜித்தின் ‘அசல்’ உள்ளிட்ட அனேக படங்களைத் தயாரித்துள்ளனர்.

இந்நட்சத்திரக் குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் உருவாகியுள்ளது. இந்நிறுவனம் சார்பாக புதிய படங்களை தயாரிக்கவிருக்கிறாராம் ராம்குமாரின் மகன் துஷ்யந்த். தமிழில் ‘மச்சி’, ‘சக்சஸ்’ ஆகிய படங்களில் இவர் நாயகனாகவும் நடித்துள்ளார்.

இப்புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ஈஷான் புரொடக்ஷன்ஸ்’ என பெயரிட்டுள்ளனர். முதல் படைப்பிற்கோ ‘மீன் குழம்பும் மண்பானையும்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தில் பிரபு, நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், ஆஷ்னா சவேரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அமுதேஷ்வர் என்பவர் இயக்க டி.இமான் இசையமைக்கிறார்.

இதனிடையில் கடந்த வாரம் மலேசியா சென்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ரஜினியை சந்தித்து ஆசி பெற்று திரும்பியுள்ளனர். ரஜினியும் சிவாஜி புரொடக்‌ஷன் போல பல வெற்றிப் படங்களை கொடுக்க வாழ்த்தியுள்ளார். விரைவில் மீன் குழம்பும் மண்பானையும் மணக்கவிருக்கிறது சென்னையில்.