‘விஜய்க்கு ‘ரசிகன்’, தனுஷுக்கு ‘துள்ளுவதோ இளமை’ அதுபோல்தான் ஜி.வி.பிரகாஷுக்கும்…’ – ‘புரூஸ் லீ’ இயக்குனர்.


‘விஜய்க்கு ‘ரசிகன்’, தனுஷுக்கு ‘துள்ளுவதோ இளமை’ அதுபோல்தான் ஜி.வி.பிரகாஷுக்கும்…’  – ‘புரூஸ் லீ’ இயக்குனர்.

இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்க ‘புரூஸ் லீ’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்து அவரின் சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது…

“என் பெயரை பிரசாந்த் பாண்டியராஜ் என்று குறிப்பிட்டுள்ளேன். அனைவரும் குருவின் பெயரை சேர்த்துக் கொண்டீர்களா? என கேட்கிறார்கள்? என் அப்பாவின் பெயரும் பாண்டிராஜ்தான். இது இரண்டும் சரியாக அமைந்தது என் அதிர்ஷ்டம். எனவே சேர்த்துக் கொண்டேன்.

சண்டை போட தெரியாத ஒருவனுக்கு ‘புரூஸ் லீ’ என்பதே பெயராக இருந்தால் எப்படி இருக்கும். அதான் இப்படத்தின் கரு. புதுமுகம் இல்லாவிட்டாலும் ரசிகர்களுக்கு அறிமுகமான ஒருவர் தேவைப்படவே ஜி.வியை நாயகனாக பிடித்தோம். இப்படத்துக்கு இசையும் அவர்தான். அவருடன் பணியாற்றுவது பிடித்துள்ளது.

நாயகி கீர்த்தி கர்பந்தா. தமிழுக்கு புதுசு என்றாலும் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளார். திறமையான நடிகை.

ஜி.வி.பிரகாஷின் முந்தைய படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் வேறுமாதிரியான படம். எனவே அதுபோன்றே கேள்விகள் கேட்கிறார்கள். ஒரு நடிகரின் எல்லா படங்களும் ஒரே போல இருக்காது. ரசிகர்களும் விதவிதமான படங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

விஜய்க்கு ஒரு ‘ரசிகன்’, தனுஷுக்கு ஒரு ‘துள்ளுவதோ இளமை’ அதன்பிறகு அவர்கள் வேறு கதைகளில் நடித்தார்கள். அதுபோல் ஜி.வி.பிரகாஷுக்கு ஒரு ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ அவ்வளவுதான். நிச்சயம் அவருக்கு ஒரு நல்ல மாஸ் ஓபனிங்கை இந்தப் படம் கொடுக்கும் என்றார் பிரசாந்த். ஓ.. ஸாரி பிரசாந்த் பாண்டிராஜ்.