வாரம் ஒரு படத்திற்கு பிரச்சினை; கடவுளை விமர்சிக்கும் உத்தமவில்லன்!


வாரம் ஒரு படத்திற்கு பிரச்சினை; கடவுளை விமர்சிக்கும் உத்தமவில்லன்!

ரஜினியின் ‘லிங்கா’ பிரச்சினை முடிந்தது என்று திரையுலகம் ஓய்வு எடுப்பதற்குள் கார்த்தியின் ‘கொம்பன்’ பிரச்சினை எழுந்தது. அப்பாடா…  அது ஒரு வழியாக முடிந்தது என்று பெருமூச்சு விடும் நிலையில் அடுத்த தடை விவகாரம் கிளம்பியுள்ளது. போங்க பாஸ் இவுங்க எப்பவுமே இப்படிதான் என்று நீங்கள் கூறுவது கேட்கிறது. சரி விஷயத்துக்கு வருகிறோம்.

இந்த வாரம்… எந்த படம் ? என்ன பிரச்சினை…

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ள உத்தமவில்லன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை மாநகர விஷ்வ இந்து பரிஷத் அமைப்பாளர் சத்யமூர்த்தி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது…

” கமல்ஹாசனின் ‘உத்தமவில்லன்’ படத்தில் பெருமாள் அவதாரங்கள் விமர்சிக்கப்பட்டு உள்ளன. தந்தை இரணியன் மற்றும்  பக்த பிரகலாதன் இடையிலான உரையாடலை வில்லுப்பாட்டாக உதிரத்தின் கதை என தொடங்கும் பாடலில் சேர்த்துள்ளனர். மேலும் நாத்திகனாக தன்னை காட்டிக் கொள்ளும் கமல், இந்து கடவுளை விமர்சித்து இருப்பது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே உத்தமவில்லன் படத்தை தடை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.