அப்துல் கலாம் வழியில் ராகவா லாரன்ஸ், தாமு!


அப்துல் கலாம் வழியில் ராகவா லாரன்ஸ், தாமு!

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவால் நாடே சோகத்தில் மூழ்கியது. இன்னும் அந்த துயரத்தில் இருந்து மக்கள் முழுமையாக மீளவில்லை. அவரின் மரணம் மூத்த தலைவர்கள் முதல் இளைய சமுதாயம் வரை வெகுவாக பாதித்துள்ளது.

இந்நிலையில் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதில் அப்துல்கலாமின் மறைவால் மிகவும் மனம் உடைந்து காணப்படுகிறார் நடிகர் தாமு. இறுதிச் சடங்கு அன்று அப்துல் கலாமின் உடல் அருகிலேயே மிகத்துயரத்தில் அமர்ந்திருந்தார் தாமு. அஞ்சலி செலுத்துவோர் வைக்கும் மலர் வளையங்களை எடுத்து அப்புறப்படுத்தும் பணியை மிக அமைதியாக எவரிடமும் பேசாமல் தானாக செய்து கொண்டிருந்தார். தற்போது அப்துல்கலாமின் வேண்டுகோளுக்கிணங்க நற்பணிகளை செய்து வருகிறார் தாமு. இதுகுறித்து அவர் கூறியதாவது…

“மக்களை உன்னை நேசிக்கிறார்கள். அவர்களுக்கு நீ ஏதாவது செய்ய வேண்டும் என டாக்டர் அப்துல்கலாம் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். மாணவர் சமுதாயத்திற்காக உனது நற்பணியை செலவிடு என 2011ஆம் ஆண்டில் என்னிடம் தெரிவித்தார். அதன்படி 7 லட்சம் மாணவர்களையும், 9 ஆயிரம் ஆசிரியர்களையும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பெற்றோர்களையும் சந்திக்க வைத்தார்.

தற்போது ஒரு மூத்த விஞ்ஞானி ஆசிரியரை இழந்து விட்டோம். எல்லாவற்றையும் நமக்கே கொடுத்து விட்டார். நாம் எல்லோரும் இணைந்து அவரது பணியை தொடர்ந்து இந்த சமுதாயத்தில் ஒரு பொற்காலத்தை மலரச் செய்வோம்” என்றார் தாமு.

இவரைத் தொடர்ந்து நடிகர் லாரன்சும் ஒரு பெரிய தொகையை அப்துல்கலாமின் பசுமை திட்டத்திற்கு வழங்கியுள்ளார். நேற்று நடைப்பெற்ற ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ மற்றும் ‘நாகா’ படங்களின் அறிமுக விழாவில் லாரன்சுக்கு அட்வான்ஸ் தொகையாக ‘வேந்தர் மூவிஸ்’ மதன் ரூ.1 கோடியை கொடுத்தார். அடுத்த நிமிடமே அந்த தொகையை மறைந்த அப்துல்கலாம் பெயரில் ஏழைக்குழந்தைகளின் கல்வி மற்றும் மரக்கன்றுகள் நடும் பசுமை திட்டத்துக்கு வழங்குவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் மேடையிலேயே அறிவித்தார்.