‘ஜில்லா’ புரொடியூசருடன் மீண்டும் இணையும் லாரன்ஸ்!


‘ஜில்லா’ புரொடியூசருடன் மீண்டும் இணையும் லாரன்ஸ்!

‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ ஆகிய பேய் ஹிட் படங்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகி விட்டார் ராகவா லாரன்ஸ். தற்போது வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்காக ‘நாகா’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தன் பிறந்தநாளை கொண்டாடினார் லாரன்ஸ். இதனையொட்டி சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜித்தன் ரமேஷ் மற்றும் இயக்குனர் சாய்ரமணி ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு புதிய படம் குறித்து இவர்கள் பேசியதாகவும் அதற்கு லாரன்ஸ் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் சாய்ரமணி இயக்கும் புதிய படத்தில்தான் லாரன்ஸ் நடிக்கவுள்ளாராம். இவர் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடித்த ‘சிங்கம்புலி’ படத்தை இயக்கியவர் என்பது நாம் அறிந்ததே. இந்த புதியப்படம் ஒரு குறுகியகால தயாரிப்பு என்பதால் வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்து இருக்கிறாராம் லாரன்ஸ். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

விஜய் நடித்த பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். கடந்த ஆண்டு விஜய், மோகன்லால் நடித்த ‘ஜில்லா’ படத்தை தயாரித்து வெளியிட்டது. கடந்த 2002ஆம் ஆண்டு லாரன்ஸ் நாயகனாக நடித்த ‘அற்புதம்’ படத்தையும் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.