ரஜினியுடன் பாலிவுட், ஹாலிவுட் இணையும் ‘எந்திரன் 2.0’


ரஜினியுடன் பாலிவுட், ஹாலிவுட் இணையும் ‘எந்திரன் 2.0’

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மெகா பட்ஜெட் படமான ரஜினியின் ‘எந்திரன் 2.0’ படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது. படத்தின் பிரம்மாண்டத்தை போன்று படத்தின் தொடக்கவிழாவையும் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டு இருந்ததாம் லைக்கா நிறுவனம்.

ஆனால் அண்மையில் பெய்த கனமழை காரணமாக படப்பிடிப்பு மிக எளிமையாக இன்று தொடங்கப்பட்டது.
இப்படம் இதுவரை எந்திரன் 2 என்று அழைக்கப்பட்டாலும் பெயர் மாறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் ஷங்கர் இப்படத்திற்கு 2.0 என்றே பெயரிட்டு அழைத்து வருகிறார்.

இதன் படப்பிடிப்புக்காக ரஜினி இதுநாள் வரை வளர்த்து வந்த வெண்ணிற தாடியை எடுத்துள்ளார். தற்போது கபாலி கெட்டப்பில் இருந்து மீண்டும் வசீகரன் கெட்டப்புக்கு திரும்பியிருக்கிறார்.

இப்படத்திற்காக ரஜினியுடன் இணைகிறார் பாலிவுட் நடிகர் அக்ஷயகுமார். இவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை நாயகி மட்டும் முடிவாகவில்லையாம்.

இப்படம் 3டியில் உருவாக்கப்படவிருக்கிறது. ஐயன் மேன், அவென்ஜர்ஸ் போன்ற படங்களில் பணியாற்றிய லிகசி எஃபெக்ட்ஸ் நிறுவனம் அனிமட்ரானிக்ஸை கவனித்துக் கொள்கிறது. ட்ரான் படத்துக்கு காஸ்ட்யூம்ஸ் தயார் செய்த மேரி.இ.வோட் இப்படத்தில் இணைகிறார்.

டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ஆக்‌ஷன் இயக்குனர் கென்னி பேட்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸுக்கு லைஃப் ஆஃப் பை புகழ் ஜான் ஹியூஸ் போன்ற ஹாலிவுட் வல்லுனர்களும் இப்படத்தில் இணைகிறார்கள்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க முதன்முறையாக ஷங்கருடன் கைகோர்க்கிறார் வசனகர்த்தா ஜெயமோகன். ஒளிப்பதிவை நீரவ்ஷா கவனிக்க கலைக்கு முத்துராஜ். சவுண்ட் டிசைனை ரசூல் பூக்குட்டி கையாள ஆண்டனி எடிட்டிங் செய்கிறார்.

ஆக மொத்தத்தில் தலைவர் ரஜினியுடன் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை இணைகிறது. வாழ்த்துக்கள்…