ராஜமௌலி இயக்கத்தில் ரஜினியின் ‘திப்பு சுல்தான்’?


ராஜமௌலி இயக்கத்தில் ரஜினியின் ‘திப்பு சுல்தான்’?

கன்னடத்தில் அர்ஜூனை வைத்து ‘பிரசாத்’ என்ற படத்தைத் தயாரித்தவர் அசோக் கெனி. இவர் கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். மேலும் கன்ஸ்ட்ரக்ஷன் உள்ளிட்ட தொழில்களை செய்துவரும் பிரபல தொழிலதிபர் இவர். தற்போது ‘நானே பாரி நீனு’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இவர் தனது கனவுப் படமான ‘திப்பு சுல்தான்’ படத்தை எடுக்க நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார். இந்நிலையில் ராஜமௌலியின் ‘பாகுபலி’ படத்தை பார்த்த இவர், அவரை போன்ற ஒரு இயக்குனர் ‘திப்பு சுல்தான்’ வரலாற்று படத்தை இயக்கினால் பொருத்தமாக இருக்கும் என்பதால் தற்போது அதற்கான முயற்சியில் இறங்கவுள்ளாராம். இதுகுறித்து அசோக் கெனி கூறியதாவது…

“திப்பு சுல்தானின் பெருமைகள் பல. அவற்றை இவ்வுலகம் முழுமையாக அறியாது. எனவே அவரின் புகழை மக்களுக்கு தெரிவிக்க நான் ஆசைப்படுகிறேன். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனுக்கு பல கப்பல்களைப் பரிசாகத் தந்த பெருமைக்குரியவர் திப்பு சுல்தான்.

இது போன்ற கதையில் ரஜினிகாந்த் நடித்தால் அது உலகெங்கும் சென்றடையும். அதுவே திப்புவுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும். எனவே இது தொடர்பாக ரஜினியை சந்தித்துப் பேச இருக்கிறேன். ‘பாகுபலி’ படத்தை தந்த ராஜமௌலி போன்ற ஒரு படைப்பாளி இப்படத்தை இயக்கினால் மிக பொருத்தமாக இருக்கும். அதுவே என் ஆசையும் கூட… ” என்றார்.