‘மூட்டை தூக்கும் கூலியாக இருந்தவர் ரஜினி’ – எஸ்பி.முத்துராமன்


‘மூட்டை தூக்கும் கூலியாக இருந்தவர் ரஜினி’ – எஸ்பி.முத்துராமன்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் கவிஞர் பரமசிவன் எழுதிய ‘ஒரு தமிழ்க் கவிஞனின் ஆங்கில பாடல்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசினார். அப்போது அவரின் திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது…

“சினிமாவில் தன் பயணத்தை தொடங்குவதற்கு முன் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் தமிழக முதல் அமைச்சர் ஆனவுடன் ஏழைகளின் நிலையறிந்து மூட்டையுடன் கூடிய சத்துணவு திட்டங்களை கொண்டு வந்தார்.

அவரைப்போலவேதான் நடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் தங்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இன்று அவர்களின் கடின உழைப்பாலும் திறமையாலும் புத்திசாலித்தனத்தாலும் இன்று உயர்ந்த நிலையை சமூகத்தில் அடைந்துள்ளார்கள்.

ரஜினிகாந்த் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அவர் கண்டக்டராக வேலை பார்த்தார் என்பதே பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே மூட்டை தூக்கும் கூலி வேலை செய்தவர் அவர். இதை என்னுடைய படத்தில் நடித்தபோது அவரே சொன்னார்.

‘ராணுவ வீரன்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அவரின் காட்சியை முடித்துவிட்டு அரிசி ஆலையில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மீது படுத்து உறங்கிவிட்டார். அதன்பின்னர் அவரை அழைத்தபோது ‘நெல் மூட்டை மீது படுத்தால் உடம்பு அரிக்காதா?’ என்றேன். ‘நான் சினிமா வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலி வேலைதான் செய்தேன். எனக்கு இதெல்லாம் சகஜம்’ என்றார்.

அன்றைய அவரது கஷ்டத்தின் பலன்தான் இன்று அவர் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருக்கிறார்” என்றார் எஸ்பி முத்துராமன்.