நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினியின் முடிவு என்ன?


நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினியின் முடிவு என்ன?

நடிகர் சங்கத் தேர்தல் அடுத்த செப்டம்பர் மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்காக சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் திரையுலக பிரபலங்களை சந்தித்து வருகின்றனர். ஓரிரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் ரஜினி, கமலை விஷால் அணியினர் சந்தித்தனர். இதில் விஷாலுடன் கார்த்தி, நாசர், பொன்வண்ணன், கருணாஸ், குஷ்பூ ஆகியோர் உடன் சென்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் சரத்குமார். இவர்கள் இருவரும் கிட்டதட்ட ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது தமிழ் திரையுலகில் படம் வெளியாகும் சமயத்தில் ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்டவைகளை இவர்கள் பேசினார்களாம்.

இச்சந்திப்பு பற்றி சரத்குமார் கூறியதாவது… ‘‘ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படமான ‘கபாலி’ பற்றியும் இதன் படப்பிடிப்புக்காக அவர் அடுத்த மாதம் மலேசியா செல்லவிருக்கிறார் அகு குறித்தும் பேசினோம். மேலும் தமிழ் சினிமாவில் தற்போது நிலவும் பிரச்சினைகள் குறித்தும் நடிகர் சங்க தேர்தல் பற்றியும் எங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்’’ என்றார்.

சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் ரஜினியை சந்தித்து சென்றுள்ளதால் அவரின் ஆதரவு யாருக்கு என்று கோலிவுட்டில் கேள்வி எழுந்துள்ளது.