ரஜினி பிறந்த நாளில் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ்!


ரஜினி பிறந்த நாளில் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ்!

காக்கி சட்டை படத்தை தொடர்ந்து ரஜினிமுருகன் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது. எனவே படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினையால் படம் வெளியாவதில் தாமதம் ஆனது.

விரைவில் வெளியாகும் என பல தேதிகளை ஒவ்வொரு மாதமாக தயாரிப்பாளர்கள் கூறிவந்தனர். இதனால் பொறுமையிழந்த சிவகார்த்திகேயன் தன் அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதுப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரஜினிமுருகன் படத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டதால் இப்படம் விரைவில் வெளியாவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த தினமான டிசம்பர் 12ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.