ராஜ்கிரண் நடிக்க புன்னகை பூ கீதாவின் ‘சிவப்பு’


ராஜ்கிரண் நடிக்க புன்னகை பூ கீதாவின் ‘சிவப்பு’

‘கொம்பன்’ படத்தை தொடர்ந்து ராஜ்கிரண் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகியுள்ள படம் ‘சிவப்பு’.  இப்படத்தில் கோனார் என்ற அழுத்தமான வேடமேற்று இருக்கிறார். ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

பல வெற்றிப் படங்களை வழங்கிய முக்தா ஆர். கோவிந்த் தனது முக்தா என்டர்டெயின்மெண்ட் மற்றும் புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது.

நாயகனாக நவீன் சந்திராவும் நாயகியாக ரூபா மஞ்சரியும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் தம்பி ராமைய்யா, செல்வா, போஸ் வெங்கட், ஏ. வெங்கடேஷ், அல்வா வாசு, பூ ராம், சோனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் குறித்து இயக்குனர் சத்யசிவா கூறியதாவது…

“இலங்கை தமிழர் பற்றிய படம் இது. ஆனால் இங்கேயேதான் படப்பிடிப்பை நடத்தினோம். இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கே வந்து முகாம்களில் தங்கி குடியுரிமைக்காக ஏங்குகிறவர்களின் வாழ்க்கை பதிவு தான் சிவப்பு.

இங்கிருந்து ஆஸ்திரேலியா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குத் தப்பிப்போக நினைத்து, முடியாதவர்களின் மன வலி, காதலையும் உள்ளடக்கிய கதை. பாதுகாப்புத் தர வேண்டிய சமூகம் அவர்களை பந்தாட நினைக்க பாதுகாப்பு அரணாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார். இப்படம் மே மாதம் திரைக்கு வர தயாராகவுள்ளது” என்றார்.