மீண்டும் டைரக்ஷனில் இறங்கும் ‘கொம்பன்’ ராஜ்கிரண்!


மீண்டும் டைரக்ஷனில் இறங்கும் ‘கொம்பன்’ ராஜ்கிரண்!

ஒரு தயாரிப்பாளராக தன் திரையுலக வாழ்க்கையை துவங்கியவர் ராஜ்கிரண். ராமராஜன், ரூபிணி, ஸ்ரீவித்யா, வினுசக்கரவர்த்தி நடித்த ‘என்ன பெத்த ராசா’ மற்றும்’ ராசாவே உன்னை நம்பி’ போன்ற படங்களை தயாரித்திருந்தார். பின்னர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக அறிமுகமானார். மீனா, கவுண்டமணி, செந்தில், ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்த இப்படம் பெரிய வெற்றி பெற்று. நிறைய விருதுகளை அள்ளி. வெள்ளி விழா கொண்டாடியது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பின்னர் தானே ஹீரோ + தயாரிப்பாளர் + இயக்குனராகவும் களத்தில் இறங்கினார். ‘அரண்மனை கிளி, ‘எல்லாமே என் ராசாதான்’ போன்ற படங்கள் இவருக்கு வெற்றி மாலையை சூடியது. பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான ‘கொம்பன்’ படத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருந்தார் ராஜ்கிரண். மருமகனுக்கும் மாமனாருக்கும் உள்ள உறவை அருமையாக வெளிப்படுத்திருந்தார் இவர். மகளிடம் மாப்பிள்ளைக்காக பரிந்து பேசுவதாகட்டும் மாப்பிள்ளையிடம் கோபப்படுவதாகட்டும் என ஒவ்வொரு காட்சியிலும் வாழ்ந்து காட்டியிருந்தார் இந்த ‘கொம்பன்’ முத்தையா.

கொம்பன் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது இயக்குனராக மீண்டும் களம் இறங்கவிருக்கிறார். அண்மையில் இவரது முதல் படமான ‘என் ராசாவின் மனசிலே’ படம் ரீமேக் செய்யப்படுவதாகவும் அதில் ராஜ்கிரண்-மீனாவும் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஒருவேளை தற்போது வெளியாகியுள்ள செய்தி அப்படம் குறித்த தகவலாக இருக்குமோ என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது. விரைவில் இதுப்பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.