உத்தமவில்லனுக்கு பயந்து ‘ஓ காதல் கண்மணி’ தள்ளிப்போனது


உத்தமவில்லனுக்கு பயந்து ‘ஓ காதல் கண்மணி’ தள்ளிப்போனது

தேர்வுகள் முடிந்தவுடன் ஏப்ரல் முதல் வாரத்தில் காதல் கண்மணியை பார்த்து விடலாம் என்று காத்திருந்த ரசிக கண்மணிகளுக்கு ஒரு சிறிய வருத்தமான செய்தி. மணிரத்னம்-ஏ.ஆர்.ரகுமான்-பி.சி.ஸ்ரீராம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்மையில் வெளியான ‘மன மன மன மெண்டல் மனதில்…’ பாடலும் வெகுவாக கண்மணிகளை கவர்ந்து அவர்களது காதல் டோனாக… மன்னிக்கவும் அவர்களது காலர் டோனாக மாறியிருக்கிறது. தற்போது இசை வெளியீட்டு விழா மற்றும் படத்தின் வெளியீட்டு தேதி ஆகியவற்றிக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் லிங்குசாமி இணைந்து தயாரித்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பட்டிருக்கிறது.

‘ஓ காதல் கண்மணி’ படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் விற்றுவிட்டார் மணிரத்னம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்கள் வந்தால் வசூல் பாதிக்கும் என்பதாலும், கமல் போன்ற பெரிய நடிகர் படங்களுடன் மோதுவது சரியல்ல என்று நினைத்த ஸ்டூடியோ க்ரீன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைக்க தீர்மானித்துள்ளனர். எனவே ‘உத்தமவில்லன்’ வெளியாகி சில நாட்கள் கழித்து ‘ஓ காதல் கண்மணி’ படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.