‘சவாலே சமாளி’ நாளை ரிலீஸ்; சவால் விடும் அருண்பாண்டியன்!


‘சவாலே சமாளி’ நாளை ரிலீஸ்; சவால் விடும் அருண்பாண்டியன்!

விஷால் நடித்து வேந்தர் மூவிஸ் தயாரித்த பாயும் புலி படத்திற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது. இதனால் நாளை செப்டம்பர் 4ஆம் தேதி முதல் எந்த படத்தையும் வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. ஆனால் நாளை வெளியாகவுள்ள சவாலே சமாளி படம் திட்டமிட்டபடி வெளியாகும் என தயாரிப்பாளரும் நடிகருமான அருண்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இவரும் தயாரிப்பளார் கவிதாபாண்டியனும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
நாங்கள் தயாரித்துள்ள ‘சவாலே சமாளி’ படம் நாளை (04.09.2015) திட்டமிட்டப்படி உலகமெங்கும் 170 அரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டிற்கு எல்லாம் தயாராகவுள்ளது. இதற்காக பல கோடி செலவு செய்துள்ளோம். படத்தை திடீரென நிறுத்த முடியாது.

சரியான திட்டமிடலுடன் படம் ஆரம்பிக்கப்பட்டு ரிலீஸ் தேதியும் முறைப்படி அறிவிக்கப்பட்டு விளம்பரம் செய்துள்ளோம். இனி நானே நினைத்தாலும் படத்தின் ரிலீசை நிறுத்த முடியாது. காரணம் படம் ரிலீசுக்கான அனைத்து விதமான தொழில்நுட்ப ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

ஒருவேளை தமிழகத்தில் படத்தை நிறுத்தினாலும் வெளிநாட்டில் படம் ரிலீஸ் ஆகும். கண்டிப்பாக திருட்டு வீ.சி.டி உள்ளிட்ட பல கடுமையான பாதிப்புகள் ஏற்படும். ஒரு தயாரிப்பாளராக எனக்கு கடுமையாக பிரச்சனைகள் ஏற்படும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் முடிவில் எந்த நியாயமும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் ‘லிங்கா’ படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ததே நான்தான். அந்த வகையில் நானும் கடுமையாக பாதிக்கப்பட்டேன். அதை நான் இதுவரை எந்த மேடையிலும் இதை சொன்னதில்லை. ஆனால் அவர்களாக நஷ்டத்தை ஈடுகட்டுவதாக சொன்னார்கள் ஆனால் அதையும் செய்யவில்லை. செங்கல்பட்டு என்ற ஒரு குறிப்பிட்ட எரியாவிற்காக ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது தவறானது” என்றார்கள்.