சூர்யா இல்லாமல் இணையும் ‘ஏழாம் அறிவு’ கூட்டணி!


சூர்யா இல்லாமல் இணையும் ‘ஏழாம் அறிவு’ கூட்டணி!

தமிழில் ஒரு சில நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதே சமயத்தில் இதுபோன்ற ஒரு எதிர்பார்ப்பை தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களும் ஏற்படுத்தியுள்ளனர்.  அவற்றில் முக்கியமான ஒருவர் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் என்று சொன்னால் அது மிகையல்ல.

விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் நடிக்கப்போவது யார்? என்ற பேச்சு பரவலாக எழத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ‘துப்பாக்கி’ படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். தற்போது ரஜினியின் லிங்கா நாயகி சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கும் ‘அகிரா’ என்ற இந்திப்படத்தை இயக்கி வருகிறார்.  தற்போது இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தை இயக்க முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதில் மகேஷ்பாபு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறாராம்.

சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படம் மூலம் ஸ்ருதிஹாசனை தமிழில் அறிமுகம் செய்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது சூர்யா இல்லாத இவர்களின் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.