பிரிவினையில் உடன்பாடு இல்லை; துணைத்தலைவர் சிம்பு பேட்டி


பிரிவினையில் உடன்பாடு இல்லை; துணைத்தலைவர் சிம்பு பேட்டி

நடிகர் சங்கத் தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சரத்குமார் அணியும் விஷால் அணியும் மோதுகிறது. சரத்குமார் அணியில் சிம்பு துணைத்தலைவராகப் போட்டியிடுகிறார்.

கடந்த ஆண்டுகளில் 2006, 2009, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் சரத்குமாரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றனர். இதுகுறித்து தேர்தலில் போட்டியிடும் சிம்பு கூறியதாவது…

நான் 14 வயதில் இருந்தே நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறேன். நான் நடிகன், டி.ராஜேந்தரின் மகன், தமிழன் இதையெல்லாம் தாண்டி நான் ஒரு மனிதன் என்பதை ஆன்மிக ரீதியாக உணர்ந்தவன். எனக்கு எப்போதும் பிடிக்காத ஒன்று பிரிவினை. அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. ஒட்டுமொத்த நடிகர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

என்னிடம் ஏன் இளைஞர்கள் அணியில் சேரவில்லை என்று கேட்கிறார்கள். இங்கே எந்த அணி என்பது முக்கியமில்லை. உண்மை எங்குள்ளது என்பதுதான் முக்கியம். பிரச்சினை ஒன்று வந்தால் யார் முதலில் நிற்பார்கள் என்பதுதான் முக்கியம். அதே சமயத்தில் தப்பு எங்கு நடந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பேன். எந்த அணி ஜெயிக்கும் என்பது பற்றி கவலையில்லை. ஆனால் கடைசியில் உண்மைதான் ஜெயிக்கும்” என்றார்.