சிலம்பரசனுடன் இணைந்த ஸ்ருதிஹாசன்!


சிலம்பரசனுடன் இணைந்த ஸ்ருதிஹாசன்!

சிம்புவின் ‘வாலு’ வருமா? வராதா? என்ற கேள்விக்கு ஒரு வழியாக பதில் கிடைத்துவிட்டது. அதாவது ‘வாலு’க்கு வழி கிடைத்துவிட்டது. பல பிரச்சினைகளால் வெளிவராமல் நின்று கொண்டிருந்த இப்படத்தை சிம்புவே வாங்கி வெளியிட முன்வந்து விட்டார். மே 22ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இப்படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், ‘ஆடுகளம்’ நரேன், மந்த்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை விஜய் சந்தர் இயக்கியிருக்கிறார். ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ள நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.

இந்நிலையில் தனது அடுத்த படமான ‘இது நம்ம ஆளு’ படத்தையும் உடனே வெளியிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் சிம்பு. சிம்பு ஜோடியாக நயன்தாரா, ஆண்ட்ரியா நடிக்கின்றனர். மேலும் சந்தானம், சூரி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்க சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தற்போது இப்படத்திற்காக ஒரு பாடலை பாட ஸ்ருதிஹாசனை சிம்பு கேட்டுக் கொண்டாராம். அவரும் ஓகே சொன்னதால் அடுத்த வாரம் அப்பாடல் ஸ்ருதியின் குரலில் பதிவாக இருக்கிறது.