சிம்புவின் ‘வாலு’ மே 15 ரிலீஸ் – ‘நாட்டாமை’ சரத்குமார்!


சிம்புவின் ‘வாலு’ மே 15 ரிலீஸ் – ‘நாட்டாமை’ சரத்குமார்!

கடந்த இரண்டு வருடமாக சிம்பு நடித்து எந்த படங்களும் வெளியாகவில்லை. இப்படியே சென்றால் தமிழ் ரசிகர்கள் தன்னை மறந்து விடவும் வாய்ப்புள்ளது. அவர்கள் மறப்பதற்குள் ஒரு படத்தையாவது கொடுத்துவிட வேண்டும் என்று தலை-வால் புரியாமல் (எப்பூடி டைட்டில உள்ள கொண்டு வந்தோம் பாத்தீங்களா?) சிம்பு தவித்து கொண்டிருக்கிறார்.

‘வாலு’ படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை விஜய் சந்தர் இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில் மே 9ஆம் தேதி சிம்பு நடித்த ‘வாலு’ படம் வெளியாகி விடும் என தகவல்கள் வந்தன. அப்பாடா..! என அவரது ரசிகர்கள் பெருமூச்சு விடுவதற்குள் படம் பிரச்சினைக்குள்ளாகி இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்கரவர்த்தி வாங்கிய கடன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனவே படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி போகலாம்.

தற்போது இப்படத்தின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், “பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட்டு விடும். எனவே ‘வாலு’ திரைப்படம் மே 15ஆம் தேதி நிச்சயமாக வெளிவரும்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக பிரச்சினைக்குள்ளான ‘லிங்கா’, ‘கொம்பன்’, ‘உத்தமவில்லன்’ போன்ற படங்களை தொடர்ந்து ‘வாலு’ பட பிரச்சினையும் பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறார் சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நாட்டாமை’ தீர்ப்புன்னா அது சரியாதான் இருக்கும்!