‘ரஜினி, விஜய் இடத்திற்கு ஆசையில்லை… ஆனால் ரஜினி பட ரீமேக் ஆசை… – சிவகார்த்திகேயன்!


‘ரஜினி, விஜய் இடத்திற்கு ஆசையில்லை… ஆனால் ரஜினி பட ரீமேக் ஆசை… – சிவகார்த்திகேயன்!

தன் திரையுலக ஆரம்ப காலத்தில் இப்படியொரு பிரச்சினையை சந்திக்க போகிறோம் என்று சிவகார்த்திகேயனே நினைத்து இருக்க மாட்டார். அப்படியொரு நிதி நெருக்கடியில் சிக்கிய ‘ரஜினிமுருகன்’ படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்த சமீபத்திய பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியதாவது…

“உண்மைய சொல்லப்போனால் இந்த 10 மாதங்களாக நான் நிம்மதியாக தூங்கவில்லை. ரஜினிமுருகன் வெளியான அன்றுதான் நான் நிம்மதியாக தூங்கினேன்.

இந்தப் படத்தின் கடன் பிரச்சினைகளுக்கு நான் சம்பந்தமில்லை என்றாலும் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான படம் இது. எனவே, என் சம்பளத்தை முதலில் விட்டுக் கொடுத்தேன். பின்னர் என் சம்பளம் மைனஸ் ரூ. 50 லட்சமாக ஆகிவிட்டது.

என் குடும்பத்திலும் யாரும் ஏன் சம்பளம் இல்லை? என கேட்கவில்லை. ரசிகர்களின் கைதட்டலுக்காக நடிக்கிறேன். நான் கார், வீடு எதற்கும் ஆசைப்படவில்லை.

நான் சினிமாவுக்கு வர காரணம் ரஜினிதான். என் அம்மா எவ்வளவு முக்கியமோ அந்தளவு ரஜினியும் என் மனதில் இருக்கிறார். ரஜினியின் ‘கபாலி’ மற்றும் ‘2.ஓ’ படங்கள் எப்போது வெளியானாலும் நான் எங்கிருந்தாலும் முதல் காட்சியை பார்க்க காத்திருக்கிறேன்.

ரஜினி, விஜய் இடத்தை பிடிக்க நினைக்கவில்லை. ஆனால், என் படங்களில் அவர்களின் சாயல் இருக்கலாம். ரஜினி சார் நடித்த ‘தில்லு முல்லு’ ரீமேக்கில் நடிக்க ஆசை” என்று தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.