தினக்கூலி கேட்கிறாராம் ‘கன்னக்குழி’ அழகி ஸ்ருஷ்டி!


தினக்கூலி கேட்கிறாராம் ‘கன்னக்குழி’ அழகி ஸ்ருஷ்டி!

‘மேகா’ படத்தில் இடம்பெற்ற ‘புத்தம் புது காலை… பொன்னிற வேளை… ‘ பாடலில் ஸ்ருஷ்டி டாங்கேயின் நடனத்தையும் நளினத்தையும் பெரும்பாலானோர் நிச்சயம் ரசித்திருப்பீர்கள். கன்னக்குழி அழகை காட்டி தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டவர் இவர். இதனைத் தொடர்ந்து ‘டார்லிங்’, ‘எனக்குள் ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.

இதன்பின்னர் பின்னணி பாடகர் க்ரிஷ் உடன் ’புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ படத்தில் நடித்தார். இந்தப் படமும் சரியாக போகவில்லை. தற்போது நரேன் உடன் ‘கத்துக்குட்டி’, மா.கா.பா.ஆனந்துடன் ‘நவரச திலகம்’, ஸ்ரீ உடன் ‘வில் அம்பு’ மற்றும் ‘காலக்கூத்து’, ‘அச்சமின்றி’, ‘வருசநாடு’ உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடித்து வரும் படங்களுக்கு தனது சம்பளத்தை தினசரியாக அதாவது தினக்கூலி போல கேட்கிறாராம். அதுவும் பெரிய தொகையாக பேரம் பேசி வருகிறாராம். இதுகுறித்து ஸ்ருஷ்டி டாங்கேயிடம் கேட்டபோது…

“ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும்போதே இத்தனை நாட்களுக்குதான் கால்ஷீட் என்று பிரித்து கொடுக்கிறேன். அதற்கான சம்பளத்தையே கேட்கிறேன். இது எப்படி தவறாகும்? தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறேன். எனவே என் வளர்ச்சியை பொறுக்காத யாரோ ஒரு சிலர்தான் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதை நான் கண்டுகொள்வதில்லை. நீங்களும் கண்டுக் கொள்ளாதீர்கள்” என கன்னக்குழி தெரிய சிரிக்கிறார் ஸ்ருஷ்டி.