சூப்பர் சிங்கர்…. ஓயாத பாடல்… ஓயாத சர்ச்சை… விளக்கம் அளித்த டிவி..!


சூப்பர் சிங்கர்…. ஓயாத பாடல்… ஓயாத சர்ச்சை… விளக்கம் அளித்த டிவி..!

தமிழகத்தின் பிரபல டிவி நிறுவனம் ஒன்று, தமிழகத்தின் குரல் தேடல் என்ற பெயரில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஆகும். இதில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்ற பாடகர் வெற்றி பெற்றார். இவரின் வெற்றி பல சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

திறமையான பல புதியவர்களை மேடையேற்றவே இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தப்படுவதாக கூறப்படும் வேளையில், ஒரு பின்னணி பாடகரான ஆனந்த் அரவிந்தாக்ஷன் தேர்ந்தெடுத்திருப்பது மோசடியான செயல் என பலரும் கூறிவருகின்றனர்.

இவர் பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம் ஆகிய படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த வான்வெளி விடியாதோ (ஆரோகணம்), யார் வீட்டு மகனோ (நீர்ப்பறவை) கானா கானா (10 எண்றத்துகுள்ள), தனிமையிலே (இவன் வேற மாதிரி), ஆகிய பாடல்களையும் இவர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட டிவி தரப்பில் இருந்து பிரதீப் மில்ராய் பீட்டர் கூறியதாவது…

ஆனந்த இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போதே அவரது பேட்டியில் அவர் ஒரு பின்னணி பாடகர் என்பதை தெரிவித்து விட்டார். மேலும் அவர் ரசிகர்களிடத்தில் பிரபலமாகவில்லை என்பதால் இப்போட்டியில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் கலந்து கொள்ளக்கூடாது என்ற எந்த விதிமுறையும் இல்லை. பின்னணி பாடகர் இதில் கலந்து கொண்டால் இது பெருமையான விஷயம்தானே” என தெரிவித்துள்ளார்.