நடிக்க மறுத்த நடிகர்கள்… ஹிட்டாக்கிய ஹீரோக்கள்…


நடிக்க மறுத்த நடிகர்கள்… ஹிட்டாக்கிய ஹீரோக்கள்…

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் ஒரு சில படங்கள் என்றும் நம் நினைவில் இருந்து அழியாதவை. அதற்கு காரணம் அதன் இயக்கமும் அதில் பணியாற்றிய கலைஞர்களும் ஆவர். படம் வெளியான பிறகு நடந்த சம்பவங்கள் நமக்கு தெரியும்.

ஆனால் படம் வெளியாவதற்கு முன் அப்படத்தில் முதலில் ஒருவர் கமிட் ஆகி இருப்பார். பின்னர் அவர் விலக, வேறு ஒருவர் நடித்திருப்பார். அதில் ஒரு சில படங்கள் தோல்வியை தழுவியிருக்கலாம். ஆனால் பெரும்பாலான படங்கள் அப்படத்தில் இருந்து விலகிய நடிகரே வியக்கும் அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கும். அப்படி விலகிய நடிகர்களும்.. ஹிட்டடித்த படங்களை பற்றிய ஒரு பார்வை உங்களுக்காக…

நாயகன்

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வந்தாலும் இன்றும் இந்திய சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படம் நாயகன். இதில் கமல்ஹாசன் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இவருக்கு முன் வேலு நாயக்கர் வேடத்தில் கமிட் ஆனவர் சத்யராஜ். இதற்கு முன்பே மணிரத்னம் இயக்கிய ‘பகல் நிலவு’ படத்தில் சத்யராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காக்க… காக்க…

சூர்யாவின் கேரியரில் திருப்புமுனையாக அமைந்த படம் இது. கௌதம் மேனன் இயக்கிய இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் அஜித்தாம். அவர் மறுக்கவே பின்னர் விக்ரமை கேட்டுள்ளார் கௌதம். அவரும் விலக சூர்யா நடித்து படத்தை சூப்பர் ஹிட்டாக்கினார்.

முதல்வன்

அரசியல் உலகிலும் சினிமா உலகிலும் புரட்சியை உருவாக்கிய படம் இது. ஒரு நாள் முதல்வராக ரஜினியை பதவியில் அமர வைக்க நினைத்தார் ஷங்கர். ஆனால் ரஜினி, அரசியல் காரணங்களால் மறுக்கவே… அர்ஜுன் நடித்தார். படம் ஹிட்டடடித்தாலும், அதில் ரஜினி நடித்திருந்தால் படத்தின் ரேஞ்சே வேறு மாதிரி ஆகியிருக்கும்.

கஜினி

‘தீனா’ படத்திற்கு பிறகு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘கஜினி’ படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் அஜித். அப்போது படத்திற்கு ‘மிரட்டல்’ என பெயரிடப்பட்டிருந்தது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நாளிதழ்களில் வெளியானது. ஆனால் அஜித் மறுக்கவே சூர்யா நடித்து படத்தை ஹிட்டாக்கினார்.

தீனா

அஜித்தை இன்றுவரை அன்பாக தல என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். அதற்கு பிள்ளையார் சுழி போட்டது இப்படமே. ஆனால் முதலில் நடிக்க இருந்தவர் விஜய். ஒருவேளை விஜய் நடித்திருந்தால் ‘தளபதி’ ‘தல’ ஆக மாறியிருப்பாரோ என்னவோ?

கோ

இப்படம் ஜீவாவின் கேரியரில் முக்கியமான படம். ஆனால் முதலில் இப்படத்தில் கமிட் ஆனவர் சிம்பு. கே.வி. ஆனந்த் இயக்கிய இப்படம் சூப்பர் ஹிட்டானது.

ரோபா (எந்திரன்)

இந்திய சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு சென்ற படம் இது. உலகளவில் ரஜினிக்கு இருந்த மார்கெட்டை உலகறிய செய்தது இப்படம். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் கமல்ஹாசன். இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி ஜிந்தா நடிக்கவிருந்தார். ஆனால் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழ் சினிமாவின் அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்தனர்.

(தொடரும்…)