மயிலாப்பூர் தாதா ‘கபாலி’யாக ரஜினிகாந்த்!


மயிலாப்பூர் தாதா ‘கபாலி’யாக ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சமீபத்திய படத்தலைப்புகள் அவரின் கேரக்டர் பெயரை கொண்டே அமைக்கின்றன. இந்நிலையில் இவர் தற்போது நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கும் அவ்வாறே பெயரிட்டுள்ளனர்.

முதலில் இப்படத்தின் தலைப்பு ‘காளி’ எனவும் அதன்பின்னர் ‘கண்ணபிரான்’ என்ற தலைப்புப்பிடப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல்களின் படி இப்படத்திற்கு “கபாலி” என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயரான கபாலீஸ்வரன் என்ற பெயரை சுருக்கி “கபாலி” என பெயரிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்வந்த படமான லிங்கேஸ்வரன் என்ற பெயரை சுருக்கி “லிங்கா” என பெயரிட்டது நாம் அறிந்ததே.

இந்த கபாலி மயிலாப்பூரில் வாழும் ஒரு தாதா பற்றிய கதை என்று கூறப்படுகிறது. மேலும் மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயிலுக்கு பிரசித்தி பெற்றது என்பதால் இப்பெயரே பொருத்தமானது என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, பிரகாஷ்ராஜ், ‘அட்டக்கத்தி’ தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்புக்காக விநாயகர் சதுர்த்தியன்று ரஜினி மலேசியா செல்லவிருக்கிறார். அடுத்த நாள் செப்டம்பர் 18ஆம் தேதி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அதற்கு முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.