சூர்யாவுடன் போட்டி போடும் தனுஷ்


சூர்யாவுடன் போட்டி போடும் தனுஷ்

மலையாள படங்களில் நிறைய வெற்றிப் பெற்றாலும் சில படங்களை மற்ற மொழியில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவுகிறது. ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக் தமிழில் ‘பாபநாசம்’ ஆனது. ‘ஹவ் ஓல்டு ஆர் யூ?’ படத்தின் ரீமேக் ‘36 வயதினிலே’ ஆனது. இதனிடையில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் ரீமேக்கில் ஹீரோ ரஜினியா? அஜித்தா? என்ற பிரச்சினை இதுவரை தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு மலையாளப் படமும் இந்த போட்டியில் இணைந்துள்ளது. அதுதான் சமீபத்தில் திரைக்கு வந்து கேரளா சினிமாவை கலக்கிய ‘ப்ரேமம்’. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். காதலர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளதால் தற்போது இப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.

ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இதன் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சூர்யா மற்றும் தனுஷ் இருவருக்குமிடையில் போட்டி தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இப்படத்தை தமிழில் இயக்க கெளதம் மேனனை அணுகியுள்ளனர். ஆனால் அவர் இதற்கு முன்பே கிட்டதட்ட இதே சாயலில் ‘வாரணம் ஆயிரம்’ படத்தை கொடுத்துவிட்டதால் அவர் மறுத்துவிட்டாராம். படத்தின் நாயகன் ஒரு பக்கம், மறுபக்கம் படத்தின் இயக்குனர் யார்? என்று தேடுதல் வேட்டையும் தொடர்ந்து வருகிறது.

படத்தின் கதை பள்ளி காலத்தில் இருந்து தொடங்குவதால் தனுஷிற்கு அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.