‘அலங்காரம், ஆர்ப்பாட்டம் வேண்டாம்…’ சூர்யா அறிவுரை!


‘அலங்காரம், ஆர்ப்பாட்டம் வேண்டாம்…’ சூர்யா அறிவுரை!

‘மாஸ்’ படத்திற்கு பிறகு சூர்யா நடித்துள்ள வெளியாகவுள்ள படம் ‘பசங்க 2’. டிச. 4ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தை தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக படத்தை டிச. 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் சூர்யாவுடன் அமலாபால், பிந்துமாதவி மற்றும் நிறைய குழந்தைகள் நடித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள ‘பசங்க 2’ படம் குறித்து தன் ரசிகர்களுக்கு ஓர் அறிக்கை விடுத்துள்ளார் சூர்யா. அதில் அவர் கூறியதாவது…

“அன்பு தம்பிகளுக்கு வணக்கம். “சென்னை மற்றும் கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்கள் நேரிடையாக களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் மனித நேயப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

அன்பின் வெளிப்பாடாக நீங்கள் எனக்காக பேனர் வைப்பதையோ போஸ்டர் ஒட்டுவதையோ நான் ஒருபோதும் விரும்பியதில்லை. இதை உங்களிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். வருகிற ‘பசங்க 2’ படத்திற்கு தியேட்டர்களை அலங்கரிங்கும் செயல்களை செய்யாமல், நிவாரணப் பணிகளை தொடருங்கள். ஒருங்கிணைத்து செயல்பட தலைமை மன்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். வீண் செலவுகளை தவிர்த்து பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்து உதவுவோம்”

என்று குறிப்பிட்டுள்ளார் சூர்யா.