லிங்குசாமியின் ‘சதுரங்க வேட்டை’யில் சூர்யா!


லிங்குசாமியின் ‘சதுரங்க வேட்டை’யில் சூர்யா!

‘மாஸ்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கத்தில் ’24’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் சமந்தா, சரண்யா பொன்வண்ணன், சத்யன் ஆகியோர் நடிக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கும் ‘சிங்கம் -3′, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஹைக்கூ’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில் ‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் வினோத் இயக்கவிருக்கும் அடுத்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்ற கேள்வி கோடம்பாக்கத்தை சுற்றி வந்தது. அது ‘சதுரங்க வேட்டை’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்தன.

இதற்கிடையில் இயக்குனர் வினோத்தை சூர்யாவிடம் அழைத்துச் சென்று கதை சொல்ல வைத்திருக்கிறார் லிங்கு. ‘சதுரங்க வேட்டை 2′ கதையைக் கேட்ட சூர்யா, அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் சூர்யாவின் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ரசிகர்களின் செவிகளுக்கு இனிப்பான செய்தியாக வரவிருக்கிறது.