ஆச்சர்ய நாயகன் ‘தல’ அஜித்; பிறந்தநாள் ஸ்பெஷல்!


ஆச்சர்ய நாயகன் ‘தல’ அஜித்; பிறந்தநாள் ஸ்பெஷல்!

‘அமராவதி’ என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகி அல்டிமேட் ஸ்டாராக மாறிய அஜித்தின் ஓர் ஆசை பயணம்தான் அவரது திரையுலக வாழ்க்கை. உழைப்பாளர் தினத்தில் பிறந்து கடின உழைப்பால் வளர்ந்து ஓர் உன்னத மனிதராகவும் உயர்ந்து நிற்கும் அஜித்தின் வாழ்க்கை பயணத்தை அவரது பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்காக இங்கே வழங்குகிறோம்.

எந்த ஒரு சினிமா அடையாளமும் இல்லாமல், எவருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் தனியாக தன்னம்பிக்கையோடு 20 வருடங்களுக்கு முன்பு திரையுலகில் நுழைந்தவர் அஜித். அறிமுக காலங்களில் ஒன்றல்ல இரண்டல்ல நிறைய தோல்வி படங்களை கொடுத்தவர். ஆனால் அந்த தோல்வி படங்களே அவருக்கு பாடங்களை கொடுத்தது.

பணம் இல்லாத பயணம்…

கரம் பிடித்து தூக்கிவிடவோ, ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. தேடினாலும் கிடைக்கப் போவதில்லை. தோல்வி கிணற்றில் வீழ்ந்தார். அவரே எழுந்தார். நடந்தார். போராடினார். இன்று போராட்டங்கள் அவரை எதிர்கொள்ள தயாரில்லை.

பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் சிறுவயதிலேயே மெக்கானிக்காக பணியில் சேர்ந்தார். தானாகவே கற்றுக் கொண்டார். இனி பைக்கில் தான் தன் வாழ்க்கை பயணம் என்று முடிவு எடுத்தார். வெறுமனே பைக் ஓட்ட விரும்பவில்லை. அதிலும் தன்னை வித்தியாசப்படுத்தி பைக் ரேஸில் கலந்து கொள்ள நினைத்தார். ஆனால் பணம்… பாடாய்படுத்தியது.

பணம் இல்லாமல் தன் பயணம் நின்று விடுமோ என்ற பயம் தன்னை வருத்தியது. எதற்காகவும் பயணத்தை நிறுத்த கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அழகாக இருந்ததால் சிறு சிறு விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அழகாய் இல்லாவிட்டாலும் நிச்சயம் அவர் வாய்ப்புகளை பெற்றிருப்பார் என்பதே நிதர்சன உண்மை. தொடர்ந்து திரைப்படங்களில் காலடி எடுத்து வைத்தார். இனி பந்தயமா? படமா? என்ற யோசித்தபோது படமே வென்றது.

தோல்வியின் தோழன்…

‘பாசமலர்கள்’, ‘பவித்ரா’, ‘ராஜாவின் பார்வையிலே’ போன்ற படங்களில் நடித்தார். படம் என்று வந்துவிட்டாலும் இவர் எதிர்பார்த்த வெற்றி ஒன்று கூட கிடைக்கவில்லை. இவர் ஆசையாய் எதிர்பார்த்த வெற்றி ‘ஆசை’ படத்தின் மூலம் கிடைத்தது. இருந்தபோதிலும் இவரின் வசன உச்சரிப்புகள் சரியில்லை என்றே வாய்ப்புகள் வரமறுத்தது.

‘வான்மதி’, ‘கல்லூரி வாசல்’, ‘மைனர் மாப்பிள்ளை’ போன்ற தோல்வி படங்களை கொடுத்தார். ஆனாலும் முயற்சியை விடாமல் தொடர்ந்து கொண்டே இருந்தார். இந்நிலையில் ‘காதல் கோட்டை’ படத்தில் வாய்ப்பை பெற்றார். படத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. தேசிய விருதை தட்டிச் சென்றது.

அதன் பின்னரும் தோல்விகளே இவரை பின் தொடர்ந்தது. 10 வருடங்கள் கடந்து சென்றது. இந்த ஆண்டுகளில் இரண்டு வெற்றிகளை கொடுத்திருந்தாலும் அவை கதைக்காக கிடைத்த வெற்றி. ஆனால் தனக்கான ஒரு வெற்றியை ‘வாலி’ படத்தின் மூலம் கொடுத்தார். இப்படத்தில் ஒரு கேரக்டரில் பேசாமல் நடித்து இவரது நடிப்பை பற்றி அனைவரையும் பேசவைத்தார். பிலிம்பேர் விழாவில் ‘சிறந்த நடிகர்’ பட்டத்தை வென்றார். அப்போதிலிருந்து ஆரம்பம் ஆனதுதான் இன்று வரை தொடரும் அவரது வெற்றியும் ரசிகர் பட்டாளமும்.

அமர்களம் ஆரம்பம்…

தொடர்ந்து திரையுலகத்தை ‘அமர்கள’ப்படுத்தினார். தமிழ் சினிமாவில் தனக்கான ‘முகவரி’யை தக்கவைத்துக் கொண்டார். திரையுலகமும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்று இவரை வாரி அணைத்துக் கொண்டது. அதன்பிறகு வந்த ‘தீனா’ இவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது. அன்றுமுதல் ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

தொடர்ந்து ‘சிட்டிசன்’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தன்னால் எந்த கேரக்டரையும் செய்ய முடியும் என்பதை திரையுலகுக்கு புரியவைத்தார்.

இந்நிலையில் மீண்டும் ரேஸ் மோகம் எட்டி பார்த்தது. சிறு வயதில் ஆசை இருந்தது அன்று பணம் இல்லை. இன்று பணம், புகழ், செல்வாக்கு நினைத்ததை விட அதிகமாகவே வந்து சேர்ந்துள்ளது. எனவே மீண்டும் பந்தயங்களில் கலந்துக் கொண்டார்.

எதிலும் சாம்பியன்…

2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களிலும் கலந்து கொண்டார்.

(இந்த நிகழ்வுகளை பார்க்கும்போது ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. தீனா படத்தில் தங்கை சிறுவயதில் ஆசைபட்டதை அவள் திருமண வயதை எட்டிய காலத்தில் வாங்கி கொடுப்பார் அஜித். இதெல்லாம் எதற்குடா என்று அம்மா கேட்பார்? அதற்கு சிறுவயது ஆசையை இப்பொழுதாவது நிறைவேற்ற முடிந்ததே என்று நெகிழ்ச்சியுடன் பதிலளிப்பார்.)

அதுபோல தன் நிஜவாழ்வில் தன் சிறுவயது ஆசையை நிறைவேற்ற தன்னைத் தானே தயார் படுத்திக் கொண்டு தனது 30வது வயதில் நிறைவேற்றிக் கொண்டார் அஜித். அதே போல தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களின் நிறைவேறாத ஆசையையும் நிறைவேற்றி வருகிறார் அஜித்.

‘அமர்க்களம்’ படத்தில் நடித்தபோது ஷாலினியுடன் காதல் வயப்பட்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அனோஸ்கா என்ற ஒரு மகளும் ஆத்விக் என்றொரு மகனும் இருக்கிறார்கள்.

அஜித்தின் ஆச்சர்யமளிக்கும் விஷயங்கள்…

  • ஒரு முறை தனது குழந்தைக்கு பெயர் வைக்க கேட்டுக்கொண்டார் ஒரு தாய். நீங்கள் பெற்ற குழந்தைக்கு பெயர் வைக்கும் முழு உரிமையும் உங்களுக்கே. அதை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள் என்று அவரின் தன்மான உரிமையை அவருக்கே புரிய வைத்தார்.
  • தனக்காக எதையும் செய்ய துணியும் ரசிகர்கள் இருந்தாலும் அவர்களை தன் சுயநலத்துக்காக தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்காக ரசிகர் மன்றங்களை கலைத்தார்.
  • பவர் ஸ்டார் என தனக்குத்தானே பெயர்கள் சூட்டிக் கொள்பவர்கள் மத்தியில் தனக்கிருந்த அல்ட்மேட் ஸ்டார் பட்டத்தை துறந்தவர்.
  • என் ரசிகர்களும் மக்களும் என் படத்தை பார்க்க விரும்பினால் வந்து பார்க்கட்டும். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டேன்.
  • எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்த மாட்டேன். மக்களுக்கு பிடித்தால் அவர்கள் வாங்கி கொள்ளட்டும். நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன்.
  • மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசிவிடுபவர். சில நேரங்களில் சர்ச்சைகளிலும் மாட்டிக் கொண்டுள்ளார்.
  • ஒருவருடன் போனில் பேசும்போது உங்களிடம் நான் பேச இது சரியான நேரமா? என கேட்ட பிறகுதான் பேச ஆரம்பிப்பார்.
  • தான் நடித்த படம் வெளியான பிறகு ரிசல்ட் தெரிந்துக் கொண்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார். படம் முடிந்து சந்தைக்கு வந்து விட்டது என்பார்.
  • இமேஜ் பற்றி கவலை படாமல் படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நரைத்த முடியுடன் நடித்து வருபவர். எந்த இந்திய நடிகரும் செய்யாததை துணிச்சலுடன் செய்து வருபவர்.

தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து இன்று தமிழகத்தின் சர்ப்ரைஸிங் ஸ்டாராக வாழ்ந்து வருகிறார்.  இன்று 43ஆவது வயதை எட்டியுள்ள அஜித் அவர்களை வாழ்த்துகிறோம்.