அஜித் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி தர மறுக்கும் தியேட்டர்கள்!


அஜித் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி தர மறுக்கும் தியேட்டர்கள்!

முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் அபிமான நடிகரின் படத்தை முதல் நாள் அன்று முதல் காட்சி பார்க்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காகவே தியேட்டர் உரிமையாளர்கள் முதல் காட்சியின் மொத்த டிக்கெட்டையும் மாவட்ட தலைமை ரசிகர் மன்றத்தினரிடம் வழங்கி விடுவார்கள்.

ஆனால் தீபாவளி நாளில் வெளியாகவுள்ள அஜித்தின் ‘வேதாளம்’ படத்திற்கு இதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித் அவரது ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டதால் தியேட்டர் உரிமையாளர்கள் அவரது ரசிகர்களுக்கு சிறப்புக் காட்சி தர முடியாது என மறுத்து வருகிறார்கள். மேலும் வேறு யாராவது ஒருவர் பெரும் தொகை கொடுத்து வாங்க முன்வந்தால் அவர்களுக்கே சிறப்புக் காட்சியை கொடுத்து விடுகிறார்களாம்.

அஜித் மன்றங்களை கலைத்து விட்டாலும் அவரது ரசிகர்கள் மன்றங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். மேலும் அஜித் படங்கள் வரும்போது அதை ஒரு திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். எனவே இதுகுறித்து அஜித் மன்ற நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது….

“எங்கள் ‘தல’ அஜித் மன்றத்தை கலைத்து விட்டதால் இப்படியொரு பிரச்சினை எழுந்துள்ளது. இல்லாத மன்றத்திற்கு எதற்கு ரசிகர் காட்சி?’ என்று எங்களை கேட்கிறார்கள். பணம் அதிகம் கொடுப்பவர்களுக்கு ரசிகர் காட்சியை கொடுத்து விடுகிறார்கள். இதனால்தான் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் பெரும் தொகைக்கு டிக்கெட்டை விற்கிறார்கள். இதனால் அஜித் ரசிகர்களாகிய எங்களுக்கு வேதனையாக உள்ளது” என்றார்.