‘டண்டனக்கா போட்டீங்க; ரூ.1 கோடி குடுங்க’ – டி.ஆர்


‘டண்டனக்கா போட்டீங்க; ரூ.1 கோடி குடுங்க’ – டி.ஆர்

“டண்டனக்காஎங்க தல எங்க தல டீ ஆரு
சென்டிமென்ட்டுல தாருமாறுமைதிலி என்னை காதலி”ன்னாரு
என்ற இந்தப் பாடல் வெளியானதுதான் தாமதம். அதன்பிறகு நடப்பது எல்லாம் மின்னல் வேகம்தான்.

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்தான் இது. இமான் இசையில் அனிருத் பாட ‘டங்கா மாரி ஊதாரி’ பாடலை எழுதிய ரோகேஷ்தான் இப்பாடலையும் எழுதியுள்ளார்.

படம் ரிலீஸுக்கு முன்பே பாடல் செம குத்தாகிவிட்டது (ஸாரி) செம ஹிட்டாகிவிட்டது.  ஆனால் இந்த பாடல் மற்றும் அதைப் படமாக்கியுள்ள விதம் தன்னைப் புண்படுத்திவிட்டதாக கூறி டி ராஜேந்தர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது…

“தனக்கென்று ஒரு பாணியில் வசனங்களை உச்சரித்து, தனி ஸ்டைலை உருவாக்கி இருப்பவர் டி. ராஜேந்தர். அவரின் அனுமதி இல்லாமல் அவர் பேசும் வசனத்தை பின்னணியில் ஒலிக்கச் செய்து டண்டனக்கா  பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். இப்பாடலும் பதிவு செய்யப்படும் காட்சிகளும் சன் மியூசிக் சாட்டிலைட் சானலிலும் ‘யூ ட்யூப்’ தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அவரது பெயர், இமேஜ், வசனம் போன்றவற்றை பயன்படுத்தியிருப்பதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு தரவேண்டும். எந்த ஒரு தளத்திலும் வெளியிடுவதை நிறுத்த வேண்டும். மேலும் வழக்கு செலவுக்கு ரூ. 1000 தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.