ஐ படத்தை தடை செய்ய வலியுறுத்தி திருநங்கைகள் போராட்டம்


ஐ படத்தை தடை செய்ய வலியுறுத்தி திருநங்கைகள் போராட்டம்

பொங்கலுக்கு வெளியான ‘ஐ’ திரைப்படத்தில் திருநங்கைகளை இழிவுப்படுத்தும் காட்சிகள் இருப்பதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்தப்படத்தில் திருநங்கைகளை தவறாக சித்தரித்ததற்காக இயக்குநர் ஷங்கரும், நடிகர் விக்ரமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று போராடி வருகின்றனர். இதில் திருநங்கையும் நடிகையுமான ரோஸ், திருநங்கை பானு உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்… “டைரக்டர் ஷங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இதுபோன்ற படங்கள் இனிமேல் வெளிவராத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தணிக்கை குழுவில் திருநங்கைகள் இடம்பெற வழிவகை வேண்டும்’ என்றனர்.

இதனிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தோழி அமைப்பின் இயக்குனர் திருநங்கை சுதா தலைமையில் திருநங்கைகள் திரண்டனர். இதில் ‘காஞ்சனா’ படத்தில் நடித்த திருநங்கை பிரியாவும் கலந்து கொண்டார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது…

“காஞ்சனா, தெனாவெட்டு போன்ற படங்கள் சமூகத்தில் திருநங்கைகளின் அந்தஸ்தை உயர்த்துவதாக இருந்தன. ஆனால் டைரக்டர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் கண்டிக்கத்தக்கது. முன்னணி நடிகரான விக்ரம், சந்தானம் போன்றவர்கள் கூட எங்களை கேவலப்படுத்தியுள்ளனர். திருநங்கைகளை 3–ம் பாலினமாக கருத வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் சமூக சிந்தனையுடைய முன்னணி இயக்குனர் ஷங்கர் எங்களை இழிவுபடுத்துவது போன்று காட்சிகளை அமைத்திருப்பது வருத்தமளிக்கிறது” என்றனர்.