‘கமல், விஜயகாந்த், சத்யராஜிடம் கற்றுக்கொண்டேன்..’ – ஷக்திவேல்


‘கமல், விஜயகாந்த், சத்யராஜிடம் கற்றுக்கொண்டேன்..’ – ஷக்திவேல்

பிரபல நடிகரும் இயக்குனர் பி.வாசு மகனுமாக ஷக்திவேல் நடித்த ‘தற்காப்பு’ படம் சமீபத்தில் புத்தாண்டு தினத்தில் வெளியானது. இதில் என்கெண்டர் ஸ்பெஷல் அதிகாரியாக நடித்திருந்தார். ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் பற்றி ஷக்திவேல் வாசு கூறியதாவது…

‘தற்காப்பு’ படத்தில் என் கேரக்டரை அனைவரும் பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சிரிப்பே என் அழகு என்பார்கள். ஆனால் இப்படத்தில் மறந்தும் கூட நான் சிரிக்கவில்லை. இதற்காக என்னுடைய இயல்பான பழக்கத்தை மாற்றி ஒரு முரட்டு ஆளாகவே என்னை நான் தயார் படுத்திக் கொண்டேன். வீட்டில் கூட எவரிடமும் சிரித்து பேசவில்லை.

கமல், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோர் காவல் வேடம் ஏற்ற படங்களை பார்த்து கற்றுக் கொண்டேன். மேலும் சில டிப்ஸ்களை என் போலீஸ் நண்பர்களிடம் கற்றுக் கொண்டேன். சில வருடங்களாக எனக்கு சரியான படங்கள் அமையவில்லை. இதனால் கடந்த 3 வருடங்களாக விடியாத என் இரவுகள் தற்போது விடிந்து விட்டது.

தெலுங்கில் ‘பிரேமா’, கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘சிவலிங்கா’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறேன். ஒரு சில தமிழ் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது” இவ்வாறு ஷக்திவேல் கூறினார்.