புலியின் சாதனையை முறியடிக்குமா வேதாளம் ?


புலியின் சாதனையை முறியடிக்குமா வேதாளம் ?

முன்பெல்லாம் தமிழ் படங்கள் இந்தியளவில் பிரபலமாவதே குதிரை கொம்பாக இருந்தது. ஆனால் தமிழில் உள்ள பல திறமையான கலைஞர்களால் தமிழ் படங்களின் மார்கெட் இந்தியளவில் உயர்ந்தது. மேலும் தமிழர்களும் வேலை காரணமாக இடம் பெயர்ந்து மாநிலம், நாடு கடந்து வாழ்கிறார்கள். எனவே தற்போது உலகம் முழுவதும் தமிழர்கள் வசிக்கும் மூலை முடுக்கெடுல்லாம் தமிழ் படங்கள் ரிலீஸாக தொடங்கி விட்டன.

இதனிடையில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான விஜய்யின் ‘புலி’ படம் வெளியீட்டில் பல சாதனைகளை படைத்தது. அமெரிக்காவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியானது. மேலும் கனடாவில் இதுவரை இல்லாத அளவில் 18 அரங்குகளிலும், பிரிட்டனில் 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் வெளியானது. இவையில்லாமல் தமிழர்கள் அதிகம் வசிக்கும் லண்டனில் 62 திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் அஜித் நடித்துள்ள ‘வேதாளம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ‘புலி’யை விட அதிக திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆனால் ‘வேதாளம்’ வெளியாகும் அதே நாளில் கமலின் ‘தூங்காவனம்’ படமும் வெளியாகிறது. இதனால் அஜித் படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கிறதாம். இதனால் ஒரு சில இடங்களில் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் எனத் தெரிகிறது.

ஆனால் ‘புலி’ படம் தனியாக வெளியானதால் அதிக எண்ணிக்கையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.