விஜய் 59 அப்டேட்ஸ் : கெட்டப் மற்றும் தலைப்பு குறித்த தகவல்கள்!


விஜய் 59 அப்டேட்ஸ் : கெட்டப் மற்றும் தலைப்பு குறித்த தகவல்கள்!

நம் இல்லத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு பெயரிட நாம் எப்படியெல்லாம் யோசிப்போமோ அதேப்போல படத்திற்கு பெயரிட நம் தமிழ் திரையுலகினர் குழம்பி வருகின்றனர். மேலும் தமிழ் பெயர்கள் வைத்தால் வரி விலக்கு சலுகைகள் கிடைக்கும் என்பதால் தமிழ் அகராதிகளில் பூதக்கண்ணாடி வைத்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அட்லி இயக்கும் ‘விஜய் 59′ படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. முதலில் ரஜினியின் ‘மூன்றுமுகம்’ டைட்டில் வைக்கப்படலாம் என்ற செய்திகள் வந்தன. ஆனால் அது கைவிடப்பட்ட பின்னர் ‘காக்கி’ என்ற டைட்டில் வைக்கப்படலாம் என்ற செய்திகள் வந்தன. ஆனால், ‘வாய்மை’ இயக்குனர் செந்தில்குமார் இத்தலைப்பை பதிவு செய்து வைத்திருப்பதால் இன்னும் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறதாம்.

இதனிடையில் கடந்த 1984ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த ‘வெற்றி’ என்ற படத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்தார். இப்படத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார் விஜய். மேலும் இந்த தலைப்பு அட்லி படத்திற்கு பொருத்தமாக உள்ளதால் ‘வெற்றி’ என்ற தலைப்பும் பரிசீலனையில் உள்ளதாம். இன்னும் ஓரிரு நாட்களில் பர்ஸ்ட் லுக்குடன் படத்தின் தலைப்பு வெளியாகவுள்ளது.

இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறாராம். இதில் கிளீன் ஷேவ் செய்த கெட்டப்பிலும், ப்ளாஷ்பேக் காட்சிகளில் தாடியுடனும் நடித்துள்ளாராம். தற்போது அந்த ப்ளாஷ்பேக் காட்சிகளில்தான் விஜய், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.